உண்மையான சிவசேனா யார்? - உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே அணிக்கு பின்னடைவு

உண்மையான சிவசேனா யார்? -  உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே அணிக்கு பின்னடைவு

ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான போராட்டத்தில் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உண்மையான சிவசேனா யாருடையது என்பதை தேர்தல் ஆணையம் முடிவெடுப்பதைத் தடுக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

சிவசேனா கட்சி மற்றும் அதன் சின்னம் மீது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழு உரிமைக் கோருவதில் தேர்தல் ஆணையம் முடிவெடுப்பதைத் தடுக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேயின் பிரிவு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று விசாரித்தது.

இதில், சிவசேனாவின் எந்தப் பிரிவு உண்மையானது என்பது குறித்து முடிவெடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. மேலும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய உத்தவ் தாக்கரே முகாமின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.

ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்எல்ஏக்கள் வேறு அரசியல் கட்சியுடன் இணைவதன் மூலம் மட்டுமே அரசியல் சாசனத்தின் 10வது அட்டவணையின்படி தகுதி நீக்கத்தை தவிர்க்க முடியும் என்று உத்தவ் தாக்கரே தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது. அதே நேரத்தில், சொந்தக் கட்சியினரின் நம்பிக்கையை இழந்த ஒரு தலைவருக்கு கட்சித் தாவல் தடைச் சட்டம் ஆயுதமாக இருக்க முடியாது என்று ஷிண்டே அணி வாதிட்டது.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் அரசாங்கம் , ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏக்களால் ஜூன் மாதம் கவிழ்க்கப்பட்டது. அதன்பின்னர் ஏக்நாத் ஷிண்டே ஜூன் 30 அன்று முதல்வராக பதவியேற்றார். அவருடன் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார்.

ஆகஸ்டு 23 அன்று, உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவினர், விலகல், இணைப்பு மற்றும் தகுதி நீக்கம் தொடர்பான பல அரசியலமைப்பு கேள்விகளை எழுப்பி தாக்கல் செய்த மனுக்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in