நான் நிரபராதி... தமிழக முதல்வருக்கு சிறையில் இருந்து செந்தில் பாலாஜி எழுதிய கடிதம்!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
Updated on
2 min read

தொடர்ந்து ஜாமீன் வழங்கப்படாதது, அமைச்சர் பதவி குறித்த நீதிமன்றத்தின்  கேள்வி உள்ளிட்ட காரணங்களால் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில்  அவர் முதலமைச்சருக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால், கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. உடல்நிலை தேறிய பின் புழல் சிறைக்கு திரும்பினார்.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதால் அவர் வகித்துவந்த மின்துறை, நிதி அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும்; மதுவிலக்கு ஆயத்தீர்வை (டாஸ்மாக்) துறை, வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமிக்கும் மாற்றப்பட்டன.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார்.

சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏழு மாதங்களுக்கு மேலாக 15 தடவைக்கு மேல் ஜாமீன் கேட்டு, தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் அவர் வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'அரசு ஊழியர்கள் குற்ற வழக்கில் சிறை சென்றால் உடனே சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர். ஆனால், 200 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பவரை, அமைச்சராக வைத்திருப்பதன் மூலம், மக்களுக்கு இந்த அரசு என்ன சொல்ல வருகிறது?' என கேள்வி எழுப்பினார்.

இது அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளும் அரசை விமர்சிக்கத் தொடங்கின.  நேற்று முன்தினம் சென்னை வந்த பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும், அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடியே தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை சிறை அதிகாரி வழியாக முதல்வருக்கு நேற்று அனுப்பி வைத்தார் என தகவல் வெளியானது. அவரது கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிவைத்து, அதை ஏற்றுக் கொண்டு செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து விடுவிக்குமாறு முதல்வர் பரிந்துரை செய்வார் என கூறப்படுகிறது.  

கைதான பிறகும் அமைச்சராக நீடிப்பதால், செந்தில் பாலாஜியை வெளியே விட்டால் சாட்சிகளைக் கலைத்து விடுவார் என அமலாக்கத்துறை ஆட்சேபம் தெரிவித்து வந்ததால் அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வந்தன. இப்போது அவர் ராஜினாமா செய்து விட்டதால், இனி ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்று  சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். அவரது சகோதரர் அசோக்கும் விரைவில் சரண் அடைவார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்ர் மு.க.ஸ்டாலினுக்கு, செந்தில் பாலாஜி  அனுப்பியுள்ள  ராஜினாமா  கடிதத்தில் அவர் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார். அதில், 'தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுகிறேன், நான் நிரபராதி,  சட்டரீதியாக உண்மையை வெளி கொண்டு வர தொடர்ந்து போராடுவேன். நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. விரைவில் நீதி வெல்லும். நீதிக்காகப் போராட எனக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி ' என்று செந்தில் பாலாஜி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in