`யாராவது ஒருவருக்காவது உண்மையாக இருக்க வேண்டும்'- ஈபிஎஸ்ஸை வசைபாடும் அமைச்சர் செந்தில் பாலாஜி

 செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

`மக்களுக்கோ  அல்லது பதவி கொடுத்தவர்களுக்கோ யாராவது ஒருவருக்கு உண்மையாக இருக்க வேண்டும்.  அப்படி உண்மையாக இல்லாத அதிமுகவை  மக்கள் எப்போதுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்'' என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, "தமிழக முதல்வரின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை திமுக சார்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மஹாலில் 70 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தை இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைக்க உள்ளார். 

உயர்நீதிமன்ற உத்தரவின்படி அனுமதி இல்லாமல் இயங்க கூடிய செங்கல்சூளைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். அதே சமயம் அனுமதி உள்ள செங்கல்சூளைகள் இயங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். செங்கல் உற்பத்தி பாதிக்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மின்சாரம் தொடர்பாக ஏப்ரல், மே மாதங்களுக்கான கூடுதலாக ஏற்படுகின்ற தேவை கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4,200 மெகாவாட் கூடுதலாக தேவை ஏற்பட்டுள்ளது. டெண்டர் போடப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. கோடைக் காலங்களில் எந்த பாதிப்பும் ஏற்படாது. சோலார் மின் உற்பத்திக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஆதார் கார்டுடன் மின் இணைப்பு  விவகாரத்தில்  99.7 விழுக்காடு  இணைக்கப்பட்டுள்ளது. 0.3 சதவீதம் பாக்கியுள்ளது.

ஈரோடு தேர்தலை பொறுத்தவரையில் அதிமுக தோல்விக்கான காரணங்களை தேடி வந்தார்கள். அதனால் இப்போது திமுக வெற்றி தொடர்பாக விமர்சனங்களை வைக்கின்றனர். நினைத்த அளவு வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால் அந்த விரக்தியில் பணம் கொடுத்து ஜெயித்தார்கள், ஜனநாயகம் தோற்றுவிட்டது என  சொல்கிறார்கள். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களின் தீர்ப்பு என்பது முதல்வர் வழங்கிக் கொண்டிருக்கும் மகத்தான சாதனைகளை அங்கீகரிக்கக்கூடிய வகையில், மேலும் ஒரு மணி மகுடமாக இந்த இடைத்தேர்தல் வெற்றி பார்க்கப்படுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலின் தொடக்கம், ஈரோடு கிழக்கு தேர்தல் வெற்றி. 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் முதல்வரின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள். 

அதிமுக அவ்வளவுதான். மக்களுக்கு நன்மைகளை செய்யக்கூடிய ஒரு இயக்கமாக கட்சியை நடத்த வேண்டும். அந்த சூழல் அங்கு இல்லை. சிலிண்டர் விலை ஏறியுள்ளது. அது குறித்து அதிமுக எந்த கருத்தையும் கூறவில்லை. டெல்லியில் போட்டிபோட்டு யார் அடிமையாக இருப்பது என்பது தான் அவர்களுடைய தேவை. முட்டி போட்டு, ஊர்ந்து போய் பதவி பெற்றார்கள். அந்த பதவியை கொடுத்தவரை பற்றி பதவியில் உட்கார்ந்ததும் என்னவெல்லாம் பேசினார்கள். எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள்.

ஒன்று மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும், இல்லையென்றால்  பதவி கொடுத்தவங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும்.  யாராவது ஒருவருக்காவது  உண்மையாக இருக்க வேண்டும். மக்கள் எந்தக் காலத்திலும் இவர்களை  ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று தெரிவித்தார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in