
அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும், கடந்த ஆறு மாதங்களில் அவர் 8 கிலோ உடல் மெலிந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென அறிவுறுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் 13- ம் தேதி நள்ளிரவு, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அப்போதே நெஞ்சில் வலி ஏற்பட்டதாக கூறி காரில் சரிந்த செந்தில் பாலாஜி, உடனடியாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இதயத்தில் 3 அடைப்பு இருப்பதாக தெரிவித்தனர். இதனை மத்திய அரசின் இ.எஸ்.ஐ. மருத்துவர்களும் உறுதி செய்தனர். உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவிரி மருத்துவமனையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவ்வப்போது அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், தொடர்ந்து தூக்கமின்மையால் அவதிப்பட்ட செந்தில்பாலாஜிக்கு, புதன்கிழமை மாலை தலை சுற்றல் ஏற்பட்டதாக தெரிகிறது. முதலுதவி கொடுத்த சிறை நிர்வாகம், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல திட்டமிட்டனர்.
தீவிர தலைவலி, வாந்தி உள்ளிட்ட பிரச்சினையால் புழல் சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து செல்லப்பட்டார். அவரை உடனடியாக பரிசோதித்த சிறப்பு மருத்துவக்குழு, மேல் சிகிச்சைக்காகவும், பாதுகாப்பை கருத்தில் கொண்டும், அன்றிரவே ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றினர்.
ஓமந்தூரார் மருத்துவமனையில், இதயவியல் துறையின் கீழ், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, 6 ஆவது தளத்தில் உள்ள தனி அறையில் சிகிச்சை தொடங்கியது. சுமார் ஒரு மாதமாக2 மணிநேரம் மட்டுமே தூங்குவது, பசியின்மை, தலைவலி உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாக மருத்துவர்களிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், இதயவியல் மருத்துவர் மனோகரன், ராஜீவ் காந்தி மருத்துவமனையின் குடல் மற்றும் வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர் நாக்நாத்பாபு , நரம்பியல் மருத்துவர்கள் கொண்ட குழு ஒருங்கிணைந்த சிகிச்சையைத் தொடர திட்டமிட்டது. நாள்தோறும் 11 மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் செந்தில் பாலாஜி, அதற்கு ஏற்ப உணவு உட்கொள்ளாதது, தீவிர மனஅழுத்தம் உள்ளிட்டவற்றை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
அவரின் உடல் எடை சுமார் 8 கிலோ குறைந்ததையும், ரத்த அழுத்தம் தொடர்ந்து குறையாமல் இருப்பதையும் மருத்துவக்குழு உறுதி செய்தது.தீராத தலைவலியால் அவதிப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, முதற்கட்டமாக சி.டி ஸ்கேன் மற்றும் சில ரத்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மறுபுறம், தொடர்ந்து சிகிச்சை அளித்த போதும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த அழுத்தம் குறைந்தப்பாடில்லை. எனவே, இன்று எடுக்கப்படும் பரிசோதனைகளின் முடிவை பொறுத்தே, அடுத்தக்கட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவக்குழு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.