கியாஸ், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய பாஜக மின்கட்டண உயர்வை பேசலாமா?: அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்

கியாஸ், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய பாஜக மின்கட்டண உயர்வை பேசலாமா?: அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார். புதிய மின் கட்டண உயர்வுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளிடமிருந்து கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மின்கட்டண உயர்வு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “2014-ம் ஆண்டு 410 ரூபாய்க்கு விற்ற கியாஸ் சிலிண்டர் விலை தற்போது 1120 ரூபாய்க்கு விற்கிறது. அதுபோல் 72 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் இன்று 102 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 54 ரூபாய்க்கு இருந்த டீசல் விலை இன்று 94 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இவையெல்லாம் யாரால் உயர்த்தப்பட்டது? இதைக் கண்டித்து தமிழ்நாடு பாஜக ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்டவற்றை நடத்தட்டும்.

எவ்வித புதிய மின் திட்டங்களும் கடந்த 10 வருடங்களில் தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்படவில்லை. அதை எப்படி சரிசெய்வது, அடுத்தகட்டத்திற்கு எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற முயற்சியில் தற்போதைய தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அடுத்த ஐந்து வருடங்களில் 6220 மெகாவாட் அளவிற்கு கூடுதல் மின் உற்பத்தி செய்வதற்குத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2006-ல் தொடங்கப்பட்ட திட்டங்கள் கடந்த 10 வருடங்களில் முடிக்கப்படாததால், 12,600 கோடி ரூபாய் அளவிற்குக் கூடுதல் வட்டி மட்டும் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

இது யாரால் ஏற்பட்டது என்பதைச் சிந்திக்காமல், கட்சி இருக்கிறது என்பதைக் காட்ட வேண்டும் என்பதற்காகச் சிலர் பேசிவருகிறார்கள். அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உள்ளிட்டவற்றைச் சேர்த்து கருத்துச் சொல்லட்டும். இந்தியாவில் இருக்கக் கூடிய மாநிலங்களில் தமிழகத்தில்தான் மின்கட்டணம் மிகக் குறைவாக உள்ளது. அடித்தட்டு மக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில்தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது ” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in