காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி

குமரி அனந்தன்
குமரி அனந்தன்

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், தெலுங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் தவறி விழுந்து காயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவர் குமரி அனந்தன். தமிழிசையை பேச்சு, எழுத்து என ஆளுமையாக்கியதிலும் இவரது பங்களிப்பு அதிகம். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தமிழிசை செளந்தர்ராஜனும், குமரி அனந்தனும் சேர்ந்து ‘நீங்களும் பேச்சாளர் ஆகலாம்’ என்னும் நிகழ்ச்சியையும் தொடக்கக் காலங்களில் நடத்தினர். மறைந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரின் சொந்த அண்ணனான குமரி அனந்தன் தெலுங்கானாவில் தன் மகள் தமிழிசை செளந்தரராஜனுடன் வசித்துவந்தார்.

கன்னியாகுமரியில் ரயில்நிலையம் அருகில் குமரி வரலாற்றுக் கூடம் என்னும் அரிய வரலாறுகளை உள்ளடக்கிய கூடத்தையும் நிர்வகிக்கின்றார் குமரி அனந்தன். கடந்த சிலதினங்களாக அங்கேயே தங்கியிருந்த குமரி அனந்தன் கால் இடறி கீழே விழுந்தார். உடனே அவரது உதவியாளர் அவரை குமரிமாவட்டம், குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். வயோதிகத்தால் குமரி அனந்தன் கீழே விழுந்தாலும், சிகிச்சைக்குப் பின் அவர் நலமுடன் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜனும் மருத்துவமனை நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு தொடர்ந்து நலம் விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in