
முதுபெரும் இடதுசாரித் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான என்.சங்கரய்யா முதுமை மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 102.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்த இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் மாணவர் பருவத்திலேயே போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக, விவசாய சங்க தலைவராக திகழ்ந்த என்.சங்கரய்யா 1967, 1977, 1980 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று மூன்று முறை மதுரையில் சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்டவர்.
உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த சங்கரய்யாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.