சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் காவல் மேலும் நீட்டிப்பு: சிறப்பு நீதிமன்றம் அதிரடி

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்
சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்

பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையின் கோரேகான் பகுதியில் உள்ள பத்ரா சாவ்ல் குடியிருப்பினை மறுவடிவமைப்பு செய்ததில் நிதி முறைகேடுகள் நடந்தது தொடர்பாக உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை ஆகஸ்ட் 1ம் தேதி கைது செய்தது.

இந்த வழக்கில் கடந்த வாரம் துணை குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. இதில் சஞ்சய் ராவத் மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே, அரசுத் தரப்பு புகாரை விசாரித்து, சிவசேனா எம்.பி.யின் உதவியாளரான பிரவின் ராவத் உட்பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பினார். மேலும் சஞ்சய் ராவத்தின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து இன்று உத்தரவிட்டார்.

சஞ்சய் ராவத் இந்த பணமோசடி தடுப்புச் சட்டத்தின் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை செப்டம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சஞ்சய் ராவத்தின் வழக்கறிஞர் குற்றப்பத்திரிகையை பரிசீலித்து, அவரது மனுவில் கூடுதல் காரணங்களைச் சேர்ப்பது குறித்து முடிவு செய்ய விரும்புவதாகக் நீதிமன்றத்தில் கூறினார்.

கடந்த வாரம் சஞ்சய் ராவத்தின் ஜாமீன் மனுவை எதிர்க்கும் போது, ​​பத்ரா சால் மறுவடிவமைப்பு தொடர்பான பணமோசடி வழக்கில், ராவத் முக்கிய பங்கு வகித்ததாகவும், திரைக்கு பின்னால் செயல்பட்டதாகவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இது தனக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்ற சஞ்சய் ராவத்தின் வாதத்தையும் அமலாக்கத்துறை மறுத்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in