தீவிர கண்காணிப்பில் செம்பரம்பாக்கம் ஏரி: அச்சப்படத் தேவையில்லை என அமைச்சர் விளக்கம்

தீவிர கண்காணிப்பில் செம்பரம்பாக்கம் ஏரி: அச்சப்படத் தேவையில்லை என அமைச்சர் விளக்கம்

செம்பரம்பாக்கம் ஏரியைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இல்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, பூண்டி ஏரி ஆகியவை நிரம்பியுள்ளன.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போது வினாடிக்கு 3,675 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.  நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏரியிலிருந்து 1000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் கூடுதலாக உபரிநீர் திறந்துவிடப்பட வாய்ப்பு உள்ளது. இதையடுத்து உபரிநீர் செல்லும் கால்வாய் பகுதியில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி  மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியை இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துவருகிறது. ஆனாலும், பிரச்சினை இல்லை. வரும் 16-ம் தேதிக்குப் பிறகு மீண்டும் மழை தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இல்லை. முகலிவாக்கம் ,மாங்காடு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதற்கு செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் திறக்கப்படுவது காரணம் இல்லை ” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in