முதல்வராக ஸ்டாலின் இதைச் செய்திருக்கக் கூடாது!

- சாட்டை வீசும் செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

திமுக - காங்கிரஸ் கூட்டணி வலிமையோடு இருப்பது போல் வெளியில் தெரிந்தாலும், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு, ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை உள்ளிட்டவற்றில் திமுகவோடு காங்கிரஸ் முரண்பட்டு நிற்கிறது. கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடு அப்பட்டமாகத் தெரிய ஆரம்பித்திருக்கும் நிலையில், காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் பேசினோம்.

புதிதாகப் பொறுப்புக்கு வந்திருக்கும் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயால் கட்சியில் மாற்றம் வருமா?

அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் வந்தால், இந்தியா முழுவதும் அனைத்து இடங்களிலும் மாற்றம் ஏற்படும். இப்போதும் அந்த மாற்றம் நடைபெறும். அந்த வகையில் தற்போதும் காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெறும்.

கார்கே சோனியா குடும்பத்தின் கைப்பாவையாகத்தான் செயல்படுவார் எனச் சொல்லப்படுகிறதே?

கட்சி தொடர்பான விஷயங்களில் புதிய தலைவர் சொந்தமாக முடிவு எடுப்பார். அதில் நாங்கள் தலையிட மாட்டோம் என ராகுல் காந்தியே தெரிவித்துவிட்டார். அனைத்து விஷயங்களிலும் சுயமாக முடிவு எடுக்கும் திறன் அவருக்கு உள்ளது.

ராகுலின் இந்திய ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸை எந்த விதத்தில் வலுப்படுத்தும் என நினைக்கிறீர்கள்?

ராகுல் காந்தியின் நடைபயணம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது. நாங்கள் எதிர் பார்த்ததைவிட மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. கட்சி வேறுபாடு பார்க்காமல் வெகுஜன மக்களெல்லாம் அந்த நடைப்பயணத்தில் கலந்துகொண்டு, அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். மகாத்மா காந்தி மேற்கொண்ட தண்டி யாத்திரையைவிட ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. கன்னியாகுமரியில் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டபோது இதை நான் சுட்டிக்காட்டிப் பேசினேன். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என எல்லா மாநிலங்களிலும் மக்கள் உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி பூஜ்ஜியமாகிவிட்டது எனச் சொன்னார்கள். ஆனால், அங்கு யாரும் எதிர்பாராத வகையில் மக்கள் திரண்டு ஆதரவு தெரிவித்தார்கள்.

குஜராத் தேர்தல் களத்தில் ஏற்பட்டுள்ள மும்முனைப் போட்டியைக் காங்கிரஸ் கட்சி எப்படிச் சமாளிக்கும்?

குஜராத் நிலவரத்தைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அங்கே பாஜகவுக்குள்ளேயே நிறையக் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றது. தேர்தலில் சீட்டு கிடைக்காதவர்களெல்லாம் அதிருப்தி காரணமாக, கட்சியைவிட்டு விலகுகிறார்கள். இதனால் பாஜகவில் பெரிய அளவில் குழப்பம் நீடிக்கிறது. கடந்த தேர்தலில் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் பாஜக வேட்பாளர்கள் பலர் அங்கே வெற்றிபெற்றார்கள். இம்முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும் என மக்கள் முடிவு செய்துள்ளார்கள். ஆகவே, இம்முறை நிச்சயம் குஜராத்தைக் காங்கிரஸ் கைப்பற்றும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இதில் எனக்கென தனியான நிலைப்பாடு எதுவும் இல்லை. கட்சியின் நிலைப்பாடுதான் என்னுடைய நிலைப்பாடும். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சிதான் முதன்முதலில் கொண்டு வந்தது. தீர்ப்பில், எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி ஆகியோரைத் தவிர்த்து எனச் சொல்லி இருக்கிறார்கள். நாங்கள் அவர்களையும் உள்ளடக்கியது எனச் சொல்கிறோம். தீர்ப்பில் இந்த முரண்பாடு இருப்பது தாமதமாகவே தெரியவந்துள்ளது. காங்கிரஸ் வலியுறுத்தும் இட ஒதுக்கீடு இது இல்லை என்பதால் இதுகுறித்து கட்சித் தலைமை ஆய்வு நடத்தி வருகிறது. விரைவில் இதுகுறித்த காங்கிரஸின் நிலைப்பாட்டைக் கட்சித் தலைமை அறிவிக்கும்.

ஆனால், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீட்டு தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்களே..?

இருவரும், தீர்ப்பு வந்ததும் அதன் முழுமையான சாராம்சத்தை அறியும் முன் அவசரப்பட்டு இந்தக் கருத்தை முதலில் தெரிவித்து விட்டார்கள். காங்கிரஸ் கட்சி நீதிமன்றத் தீர்ப்பின் ஷரத்துகளை ஆய்வு செய்து வருகிறது. ஜெய்ராம் ரமேஷ், அழகிரி ஆகியோரின் கருத்து குறித்து விவாதம் செய்து கட்சியின் நிலைப்பாடு குறித்து அனைவருக்கும் மெயில் அனுப்பி இருக்கிறார்கள். நாங்கள் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மறுபரிசீலனை செய்ய இருக்கிறோம். இதுகுறித்து திமுகவிடமும் எங்கள் கருத்தைத் தெரிவித்திருக்கிறோம்.

ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

இனிமேல், வேலையின்றித் திரியும் இளைஞர்கள் மத்தியில், கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு, பிரதமர், முதல்வர், ஆளுநர் என பிரபலங்கள் யாரை வேண்டுமானாலும் கொலை செய்துவிட்டு, 30 வருடம் ஜெயிலில் இருந்துவிட்டு வெளியேறிவிடலாம் என்ற எண்ணம் மேலோங்கிவிடும் ஆபத்து இருக்கிறது. இவர்களின் விடுதலையானது, 30 வருடம் ஜெயிலில் இருந்தால் போதும், யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்று தானே சாமானியர்களையும் எண்ணத் தோன்றுகிறது. வறுமையில் இருப்பவர்கள் தங்களது குடும்பத்தைக் காப்பாற்றக் கூலிப்படையாக மாறமாட்டார்கள் என்பதற்கு இனி எந்த உத்தரவாதமும் இல்லை.

பேரறிவாளன் விடுதலையான போது அதை திமுக கொண்டாடியது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அதைக் காங்கிரஸ் ரசிக்கவில்லை. எங்கள் குடும்பத்தில் ஒருவரைக் கொலை செய்தவர்களைக் கட்டிப்பிடித்து ஆதரவு தெரிவிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் எந்த மாதிரியான வேதனையில் தவிக்கிறது என்பதை அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். விடுதலையானவர்கள், கொலையாளிகள் என உச்ச நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டுவிட்டது. திமுக தலைவராக ஸ்டாலின் இதை வரவேற்றிருக்கலாம். ஆனால் முதல்வராக அவர் இதைச் செய்திருக்கக்கூடாது.

கூட்டணிக் கட்சி என்ற முறையில் திமுகவுடனான உறவு எப்படி இருக்கிறது?

திமுகவின் கொள்கை, கோட்பாடுகள் வேறு. எங்களின் கொள்கை, கோட்பாடுகள் என்பது வேறு. திமுகவும், காங்கிரஸும் நிறைய விஷயங்களில் முரண்பட்டிருக்கிறது.

குஷ்பு உள்ளிட்ட பாஜக நடிகைகள் குறித்து திமுக பேச்சாளர் சைதை சாதிக்கின் அநாகரிகப் பேச்சுக்குக் காங்கிரஸ் தரப்பிலிருந்து கண்டிப்பு வரவில்லையே ஏன்?

குஷ்பு மட்டுமல்ல. எந்த ஒரு பெண்ணையும் இப்படி இழிவாகப் பேசுவது தவறுதான். அது தலைமையின் கவனத்திற்கு வராமல் இருந்திருக்கலாம். அதனால் காங்கிரஸ் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் விட்டிருக்கலாம்.

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழகத்தில் பாஜக வளரவில்லை. சமூக விரோதிகள்தான் வளர்ந்து வருகிறார்கள். ரவுடிகளின் கூடாரமாக பாஜக மாறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in