கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது ஏன்?- செல்வப்பெருந்தகை அதிர்ச்சி தகவல்

கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது ஏன்?-  செல்வப்பெருந்தகை அதிர்ச்சி தகவல்

கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். “பொருளாதார சீரழிவைப் பற்றி ப.சிதம்பரம் தொடர்ந்து பேசிவருகிறார். அவர் பேசுவதைத் தடுக்கும் வகையில், ஜனநாயக குரல்வளையை நெறிக்கும் போக்கை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது“ எனச் செல்வப் பெருந்தகை கூறியிருக்கிறார்.

ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா வெளிநாட்டிலிருந்து பணம் பெற உதவியதாக சிபிஐ ஏற்கெனவே வழக்கு பதிவு செய்திருந்தது. கார்த்தி சிதம்பரத்திற்குச் சொந்தமான இடங்களில் ஏற்கெனவே சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், டெல்லியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.

சிபிஐ
சிபிஐ

டெல்லியில், லோகி எஸ்டேட் பகுதியில் உள்ள கார்த்தி சிதம்பரம் தங்கியுள்ள வீட்டில் 9 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சென்னை, மும்பையில் தலா 3 இடங்களிலும், பஞ்சாப், ஒடிசா, கர்நாடகாவில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

2010 முதல் 2014 வரையிலான காலத்தில் சீனாவைச் சேர்ந்த 250 நபர்கள் சட்டவிரோதமாக இந்தியா வருவதற்கு விசா வழங்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ சோதனை நடத்திவருவதாகவும், சட்டவிரோத விசா வழங்குவதற்காக கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்குப் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சிபிஐ தரப்பில் தகவல்கள் வெளியாகின்றன.

செல்வப் பெருந்தகை
செல்வப் பெருந்தகை

இது குறித்து காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை, “புகாரின் அடிப்படையில் ஒருவரை அழைத்து விசாரிப்பதில் தவறில்லை. ஆனால் வீட்டில் வயதானவர்கள் பெண்கள் இருக்கும் போது தொடர்ந்து சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு ஏவி விடுவது தவறானது. தமிழகத்தில் உள்ள விசாரணை அமைப்புகளால் சோதனை நடத்தப்பட்டால், சோதனை முடிந்த பிறகு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவது வழக்கம். மத்திய அரசு, தொடர் சோதனைகளால் எதிர்கட்சியினரை மிரட்டும் போக்கை கடைப்பிடிக்கிறது. இந்தியாவில் உள்ள பொருளாதார சீரழிவைப் பற்றி ப.சிதம்பரம் தொடர்ந்து பேசிவருகிறார். அவர் பேசுவதைத் தடுக்கும் வகையில், ஜனநாயக குரல்வளையை நெறிக்கும் போக்கை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது“ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in