‘வெறும் கண்துடைப்பு நாடகம்’ பாஜக தேர்தல் அறிக்கை குறித்து செல்வப்பெருந்தகை சீற்றம்

பாஜக தேர்தல் அறிக்கை
பாஜக தேர்தல் அறிக்கை

’பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறும் கண்துடைப்பு நாடகமாக அமைந்துள்ளதாகவும், அதனை இந்திய மக்கள் புறக்கணிப்பார்கள்’ என்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

தேர்தல் அறிக்கை வெளியீட்டில் தேசிய கட்சிகளுக்கு இடையிலான போட்டியில், காங்கிரஸ் கட்சி சற்று முந்திக்கொண்டு அண்மையில் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதையொட்டிய அரசியல் சடங்காக, பாஜக தேர்தல் அறிக்கையின் குறைகளை எதிர்க்கட்சிகள் பட்டியலிட்டு வருகின்றனர்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

அந்த வரிசையில் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவிக்கையில், “மக்களின் நம்பகத்தன்மையை இழந்திருக்கும் பாஜக சார்பில் வெளியாகி இருக்கும் தேர்தல் அறிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் மட்டுமே. தேசத்தின் வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான கருத்துக்கள் இதில் ஏதும் இல்லை. எனவே பொதுமக்கள் பாஜகவின் தேர்தல் அறிக்கையை புறக்கணிப்பார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பன்முகத்தன்மை வாய்ந்த தேசத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்வது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும். புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவுக்கு பழங்குடியினத்தை சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை புறக்கணித்த பாஜக, அடுத்த வருடத்தை பழங்குடியினர் ஆண்டாக கொண்டாடுவோம் என்று தெரிவித்திருப்பது இரட்டை வேடம்” என்று விமர்சித்துள்ளார்.

பாஜக தேர்தல் அறிக்கையுடன் மோடி
பாஜக தேர்தல் அறிக்கையுடன் மோடி

இவற்றுக்கு அப்பால் ’தமிழ் மொழி வளர்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்காது அதனை வளர்ப்போம் என வாக்குறுதி தந்திருப்பது, தேர்தல் பத்திரங்கள் மூலமாக முறைகேடுகள் செய்துவிட்டு ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றது, சாமானியர்களுக்கு பயனளிக்காத வந்தேபாரத் மற்றும் புல்லட் ரயில் திட்டங்கள்’ என பாஜக தேர்தல் அறிக்கையின் கூறுகள் பலவற்றையும் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

மேலும் ’ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகள் வருமானம் 2 மடங்காவது போன்ற முந்தைய ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டவை அப்படியே இருப்பதால் மோடியின் கியாரண்டி என்பதன் மேல் மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதாகவும்’ செல்வப்பெருந்தகை சீற்றம் காட்டியிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in