`மாறாதய்யா மாறாது… திமுகவினரின் மனமும் குணமும் மாறாது'- பாட்டு பாடிய செல்லூர் ராஜு

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் திமுக ரவுடிகள் புகுந்து ஊடகத்தினரைத் தாக்கியது வரலாற்றுப் பிழை. மேயர் இந்திராணி கணவரின் அதிகார அத்துமீறல் நடவடிக்கைகளை முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை காளவாசலில் உள்ள அதிமுக சட்டமன்ற அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மதுரை மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகத்தினரை, திமுக கட்சி ரவுடிகள் தாக்கிய சம்பவம் பெரும் வரலாற்றுப் பிழை. திமுக குண்டர்கள் அராஜகம் செய்தால் தண்டிக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த சில நாட்களிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

தன் குடும்பத்தினர் தலையீடு அரசில் இருக்காது என முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்கிறார். ஆனால், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் மாநகராட்சி அலுவலகத்தில் தலையீடு செய்து அதிகார அத்துமீறலில் ஈடுபடுகிறார்.

மதுரையில் திமுக பிம்பம் மாறியுள்ளது என சொன்னார் நிதி அமைச்சர். ஆனால், அவர் தேர்வு செய்த மேயரின் அலுவலகத்திலேயே குண்டர்கள் புகுந்து அராஜகம் செய்கிறார்கள். மேயர் அலுவலகத்தில் ரவுடிகளுக்கு, குண்டர்களுக்கு என்ன வேலை? என்று கேள்வி எழுப்பியதோடு, மாறாதையா மாறாது, திமுகவினரின் மனமும் குணமும் மாறாது என்று பாட்டு பாடினார்.

மேலும் அவர் கூறுகையில், ``மாநில சுயாட்சி பேசுகிற திராவிட மாடல் திமுக அரசு மதுரை மாநகராட்சி மாமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு ஏன் தனியாக இடம் ஒதுக்கவில்லை? திமுகவுக்கு அரசு ஊழியர்கள் வாக்களித்தும் அவர்களுக்கு அல்வா கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். மக்கள் விரோத அரசாக திமுக அரசு இருக்கிறது" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in