`எம்பி தேர்தலில் நாங்கள் வாக்கு கேட்டு போக மாட்டோம்'- செல்லூர் ராஜூ சொல்லும் `அடடே' காரணம்

செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு
செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு

ஈபிஎஸ்-ஓபிஎஸ் இடையேயான பிரிவு அண்ணன் தம்பி பிரிவைப் போன்றது என்றும், மனம் திருந்தி வந்தால் அவரைக் கட்சியில் ஏற்றுக் கொள்வோம் என்றும் அதிமுக அமைப்புச் செயலாளர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை சிக்கந்தர் சாவடி கோவில்பாப்பாகுடி பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளி கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்வில் இன்று பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ, "தேர்தல் நேரத்தில் இந்து மதத்தை நேசிப்பது போல திமுகவினர் செயல்படுவார்கள். தர்மபுரி எம்.பி. பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளரை பொது இடத்தில் இங்கிதம் இல்லாமல் திட்டி உள்ளார். இதனைக் கண்டிக்காத தமிழக முதல்வரின் செயல் கண்டிக்கத்தக்கது.

தமிழக மக்கள் பாஜகவை விட திமுக மீது கடும் வெறுப்பில் உள்ளனர். அதிமுகவிற்கு வாக்களிக்க எப்போது தேர்தல் வரும் என மக்கள் எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் வாக்கு கேட்டுப் போகப் போவதில்லை. திமுக மீதுள்ள வெறுப்பில் மக்களே எங்களுக்கு வாக்குகளை செலுத்திவிடுவார்கள். கூட்டணி என்பது நிரந்தரமானது அல்ல. பாஜக உடன் கூட்டணி தொடர்வது குறித்து தேர்தல் நேரத்தில் கட்சி தலைமை முடிவெடுக்கும். பிரதமரின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இந்தியா ஒரு வல்லரசு நாடாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அப்துல் கலாமின் கனவை நோக்கி பாஜக அரசு முன்னேறிச் செல்கிறது. எனவே, நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும்" என்றார்.

ஓபிஎஸ்சை மீண்டும் கட்சியில் ஏற்றுக் கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "ஒரு தொண்டன் கூட கட்சியில் இருந்து செல்லக்கூடாது என்பதே எங்கள் விருப்பம். காளிமுத்து, ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் எல்லோரும் தவறு செய்துவிட்டு மன்னிப்புக் கேட்டு திரும்பியவர்கள்தான். எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் பிரிவும் அண்ணன் தம்பி போராட்டம் தான். ஓ.பன்னீர்செல்வம் மனம் திருந்தி வந்தால் நிச்சயம் ஏற்போம். பொதுச்செயலாளர் தலைமையை ஏற்று யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்" என்று பதிலளித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in