நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அந்த கட்சி முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கங்கள் ஒரே நேரத்தில் இன்று திடீரென முடக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் செயல்பட்டு வருகிறார். அதிரடி பேச்சுக்குச் சொந்தக்காரரான சீமான், தமிழகத்தில் மாற்று அரசியலைக் கொண்டு வருவதாக பிரச்சாரம் செய்து வருகிறார். இதன் காரணமாக அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டு வருகிறார்.
திராவிட கட்சிகள் மட்டுமின்றி தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என்றும் அறிவித்துள்ளார். அத்துடன் திராவிட மாடல் ஆட்சி குறித்தும், முன்னாள் அதிமுக அரசு குறித்தும் , ஒன்றிய பாஜக அரசு குறித்தும் அதிரடியாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் சீமானின் ட்விட்டர் பக்கம் இன்று முடக்கப்பட்டுள்ளது. @SeemanOfficial என்ற அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் முடக்கம் முடக்கப்படத்தற்கு, ‛‛சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமான் மட்டுமின்றி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராஜன், விக்கி பார்கவ் உள்பட பலரின் ட்விட்டர் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் ட்விட்டர் பக்கங்கள் மொத்தமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளதால் நாம் தமிழர் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக எம்.பியை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் மீதான தாக்குதலைக் கண்டித்து ட்விட்டரில் சீமான் பதிவிட்டிருந்தார். ஆனாலும், அவரது ட்விட்டர் பக்கம் முடக்கம் செய்யப்பட்டதற்கான இது தான் காரணம் என எதுவும் தெரிவிக்கப்படவில்லை.