`சீமானின் ஆட்கள் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்'- ராஜீவ் காந்தி வழக்கை விசாரித்த பெண் அதிகாரி புகார்

`சீமானின் ஆட்கள் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்'- ராஜீவ் காந்தி வழக்கை விசாரித்த பெண் அதிகாரி புகார்

ராஜீவ் காந்தியை தாங்கள் தான் கொன்றதாக கூறிவரும் சீமான், ஆட்களை வைத்து தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி அனுசுயா சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

1991-ம் ஆண்டு நடந்த ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் அனுசுயா டெய்சி எர்னஸ்ட். காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் சேர்ந்து தற்போது மாநில செயலாளர் பொறுப்பில் உள்ளார். ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுவிப்பு குறித்து அவ்வப்போது விமர்சித்து வரும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி அனுசுயா டெய்சிக்கு செல்போனில் கொலை மிரட்டல்கள் வருவதாக டி.ஜி.பி அலுவலகம் மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இனி நளினியை பற்றியோ அல்லது விடுதலைப்புலிகள் தலைவரைப் பற்றியோ பேசினால் கொலை செய்து விடுவேன் எனதொடர்ந்து கொலை மிரட்டல் வருவதுடன் தனது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாசமான வாய்ஸ் மெசேஜ் மூலம் மர்ம நபர்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு தனக்கு வழங்க வேண்டுமென மனு அளித்துள்ளதாக அனுசியா டெய்சி தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு கொலை மிரட்டல் விடுவிப்பவர் வெளிநாட்டு எண்ணிலிருந்து அழைத்து தன் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவேன் என்றும் நளினி விடுதலை குறித்து பேட்டி அளித்தால் கொலை செய்ய போவதாக மிரட்டுகின்றனர். மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ் காந்தியை தாங்கள் தான் கொன்றோம் என்று ஏற்கெனவே பல பேட்டிகளில் கூறியுள்ள நிலையில், சீமானின் தூண்டுதலின் பேரில் அவரது ஆட்கள் தான் தன்னை தொடர்பு கொண்டு இந்த கொலை மிரட்டல்களை விடுத்து வருகிறார்கள் என்ற சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் வாட்ஸ்அப்பில் வந்த வாய்ஸ் மெசேஜ் மற்றும் அதற்குரிய எண்களை ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பித்து உள்ளதாக குறிப்பிட்ட அவர், புகாரை பெற்றுக் கொண்ட ஆணையர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன் விசாரணைக்குப் பிறகு தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பதாக தெரிவித்தார் என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in