‘தாக்குதல் தொடர்ந்தால், சும்மா இருக்க மாட்டோம்’ - ஆ.ராசாவுக்கு ஆதரவு தரும் சீமான்!

‘தாக்குதல் தொடர்ந்தால், சும்மா இருக்க மாட்டோம்’ - ஆ.ராசாவுக்கு ஆதரவு தரும் சீமான்!

‘மனு தர்மத்தைச் சாடியதற்காக ஆ.ராசாவைக் குறிவைத்து மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டு சும்மா இருக்க மாட்டோம்’ என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மனு தர்மத்தின் கொடுங்கோன்மையை எடுத்துரைத்து, சூத்திரர், எனும் இழிவை தமிழர்கள் சுமக்கக் கூடாதெனக் கூறியதால், ஆ.ராசாவைக் குறிவைத்து மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமான போக்குகளை இனியும் சகித்துக்கொண்டு இருக்க முடியாது’ எனக் கூறியிருக்கிறார்.

மேலும், ‘பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரமக் கோட்பாட்டால் விளைந்த சமூக அநீதியை அறச்சீற்றத்தோடு முன்வைத்த ஆ.ராசாவின் கருத்து மிக நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. ஓரினத்தின் மக்களென ஒற்றுமையோடு திகழ்ந்த தமிழர்கள் சாதிகளால் பிளந்து, பிரிக்கப்பட்டு, துண்டாடப்பட்டனர். கல்வியுரிமை பறிபோனது. பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு என்னும் கொடுமைகள் குடிகொண்டன. கோயிலுக்குள் நுழையக் கூடாது என அடிப்படை மானுட உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டன. மனு தர்மத்தின் மேலாதிக்கத்திற்குத் தமிழர்கள் ஆட்பட்டு, தாங்க முடியாத் துயரங்களை இன்றளவும் சந்தித்து வருகின்றனர்.

வர்ணாசிரமத்தின் பெயரால் பல ஆண்டுகளாக மண்ணின் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பழிச்சொல்லைத் தாங்கிய வலியின் மொழிதான் ஆ.ராசாவின் வார்த்தைகளில் வெளிப்பட்டுள்ளது. இவ்வளவு ஆண்டுகாலமாக இழித்துரைக்கபட்டதைத்தான் இன்றைக்கு அவர் எடுத்துரைத்திருக்கிறார். அதனை எடுத்துக் கூறியதற்கே மதவெறியர்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறதென்றால், எங்களைச் சூத்திர மக்களாக்கி இழிமகனெனப் பன்னெடுங்காலமாகப் பேசி வரும்போது எங்களுக்கு எவ்வளவு வலியும், கோபமும் இருந்திருக்கும்? தமிழர்கள் மீதான சூத்திர பட்டத்தைப் போக்க வேண்டுமென அவர் சாடினாரே ஒழிய, இறை நம்பிக்கையுடையவர்களைத் தவறாக விமர்சிக்கவில்லை. ஆரியச் சனாதன கோட்பாடுகளுக்கு எதிரான ஆ.ராசாவின் கருத்துகளை ஆதரித்து முழுமையாக அவருக்குத் துணை நிற்போம்’ என சீமான் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in