`ஒரு ஃபைலை பாதுகாக்க முடியாத நீங்க ஊழலை பற்றி பேசாதீங்க'- அண்ணாமலைக்கு எதிராக சீறும் சீமான்

`ஒரு ஃபைலை பாதுகாக்க முடியாத நீங்க ஊழலை பற்றி பேசாதீங்க'- அண்ணாமலைக்கு எதிராக சீறும் சீமான்

“கொள்கை அளவில் அரசு செய்கிற தவறுகளைச் சுட்டிக்காட்டி அதற்குப் போராடுகிற கட்சிதான் உண்மையான எதிர்கட்சியாக இருக்க முடியும். அப்படிப் பார்த்தால் நாங்கதான் உண்மையான எதிர்கட்சி“ என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பாக பாவலேறு பெருஞ்சித்தனார் நினைவு தினம் திருநெல்வேலி ரஹ்மத் நகரில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பெருஞ்சித்தனார் படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுகிறார் அண்ணாமலை. ஊழல் பற்றிப் பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? நாட்டின் பாதுகாப்பிற்காக நீங்கள் ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் செய்திருக்கிறீர்கள். அந்த ஊழல் உச்ச நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கோப்புகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கச் சொல்கிறார்கள். பாதுகாப்பு அமைச்சகத்திலேயே அந்த கோப்புகள் தொலைந்துவிட்டது எனச் சொன்னவர்கள் பாஜகவினர். ஒரு ஃபைலை பாதுகாக்க முடியாதவர்களா எங்களைப் பாதுகாக்கப் போகிறீர்கள். நீரவ் மோடி வெளிநாட்டிற்குத் தப்பி ஓடும் போது, என்னுடைய 500 கோடி பணத்தை வாங்கிக்கொண்டுதான் பாஜகவினர் தப்பிக்க விட்டார்கள் என்று சொன்னார். பத்து ஆண்டுகளாக அதிமுகவோடு கூட்டணி வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். அவர்கள் ஊழல் பற்றி அண்ணாமலை வாய் திறக்காதது ஏன்? ஊழலை நேர்மையான ஆட்சியாளர்கள் வந்தால் ஒழித்துவிடமுடியும்.

எம்சாண்ட்டிற்காக மேற்குத் தொடர்ச்சி மலையைக் கபளீகரம் செய்கிறார்கள். அதைப்பற்றி ஏன் பேசுவதில்லை. நீங்க சாமியைப் பற்றியே பேசுகிறீர்கள்! நாங்க வாழுகிற பூமியைப் பற்றிப் பேசுகிறோம். திராவிடக் கட்சிகளுக்கு மாற்று நாங்கள் தான். தமிழ் தேசிய கோட்பாடுதான் திராவிட கட்சிகளுக்கு எதிரானதாக இருக்க முடியும். திமுக அரசுக்கு எதிராக நான்தான் தினமும் பேசி வருகிறேன். தவறுகளை அந்த துறை சார்ந்த அமைச்சர்களின் கவனத்திற்கே கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வைக்கிறோம்.

கொள்கை அளவில் அரசு செய்கிற தவறுகளைச் சுட்டிக்காட்டி அதற்குப் போராடுகிற கட்சிதான் உண்மையான எதிர்கட்சியாக இருக்க முடியும். அப்படிப் பார்த்தால் நாங்கதான் உண்மையான எதிர்கட்சி. 2024 தேர்தலில் நான் தனித்துப் போட்டியிடுவேன். பாஜகவில் நீங்கள் தனித்துப் போட்டியிடுவாரா? அண்ணாமலை காசு கொடுத்துதான் கூட்டத்தைக் கூட்டுகிறார். ஆயிரம் ரூபாய் கொடுக்குறேன்னு கூட்டிகிட்டு வந்து அப்போன்னு விட்டுட்டீங்ளேன்னு ஒரு வயசான பாட்டி புலம்பவதை வாட்ஸ்அப்பில் பார்க்கிறோம். பொறுமையும் ஒரு போராட்டம்தான். நான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரன். ஆபத்து எனக் கூப்பிட்டால் ஓடோடி வருவேன்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in