`மீன் உற்பத்தி நடைபெறாது; காற்றும் மாசடைந்து விட்டது'- கொற்றலை ஆற்றில் படகில் சென்று சீமான் ஆய்வு!

`மீன் உற்பத்தி நடைபெறாது; காற்றும் மாசடைந்து விட்டது'- கொற்றலை ஆற்றில் படகில் சென்று சீமான் ஆய்வு!

எண்ணூரில் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக நிறுவனத்தால் நீர்நிலைகளின் மீன்பிடி பகுதி ஆக்கிரமிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பகுதியில் மீனவர்களுடன் சேர்ந்து ஆய்வு செய்தார். மீனவர்களின் படகின் மூலம், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கொற்றலை ஆற்றின் பகுதிகளைச் சீமான் நேரில் பார்வையிட்டார்.

தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக நிறுவனம் (TANTRANSCO) , தற்போது எண்ணூரிலுள்ள முகத்துவாரத்தினை ஆக்கிரமித்துத் தொடரமைப்பு கோபுரங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே, இந்த நிறுவனத்தால் அமைக்கப்பட்ட கோபுரங்கள் மற்றும் சாலைகளால் நீர்நிலைப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நிறுவனம் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறையின்படி பெற்ற அனுமதியினை முற்றிலும் மீறி அனுமதியில் குறிப்பிடப்பட்ட நிலப்பகுதிகளைத் தாண்டியும் அதன் கோபுரங்களை அமைத்து வருகிறது. அதன் நீட்சியாக, தற்போது கொற்றலை ஆற்றிலுள்ள மீனவர்களின் மீன்பிடி பகுதிக்குள் கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “தேசிய பசுமை தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் மற்றும் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவற்றின் உத்தரவுகள் மற்றும் ஆணைகளைத் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக நிறுவனம் தொடர்ந்து மீறி கட்டுமானங்களை விதிகளுக்குப் புறம்பாக ஏற்படுத்தியது. கடலோர ஒழுங்குமுறை மண்டலம் விதிகளுக்கு மாறாகத் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக நிறுவனம் செயல்படுகிறது. இப்பகுதி மக்களின் மீன்பிடித் தொழிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவும் தற்போதுள்ள விதிகளுக்குப் புறம்பான கட்டமைப்புகளைத் தமிழக அரசு உடனடியாக நீக்கிவிட வேண்டும். ரசாயனம், வெந்நீர், கழிவு நீர் போன்றவை ஆற்று நீரில் கலப்பதால் மீன் உற்பத்தி நடைபெறாது. சாம்பல், புகை போன்றவை காற்றில் பரவுவதால் காற்றும் மாசடைந்து விட்டது. மாற்று மின்சாரத் திட்டத்திற்கு அரசு முன்வர வேண்டும். இந்த விதிமீறல் குறித்து மண்டல, மாவட்ட மற்றும் மாநில அளவிலான துறைசார் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு நாம் தமிழர் கட்சி சார்பில் கொடுக்கப்படும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் போனால் நீதிமன்றத்தை நாடி தீர்வு காண்போம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in