நடிகை விஜயலட்சுமி மீது சீமான் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் போலீஸ் விசாரணைக்குத் தடை கோரி நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி முதலில் கடந்த 2011ல் வளசரவாக்கம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறி இந்த புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என விஜயலட்சுமி கடிதம் எழுதிக் கொடுத்தார்.
அதன்படி அந்த வழக்கு கைவிடப்பட்டது. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். இருப்பினும் அந்த புகாரை மீண்டும் வாபஸ் பெற்றிருந்தார். இது ஒரு பக்கம் இருக்க தனக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்கை ரத்து வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மனுத்தாக்கல் செய்தார்.
தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன்பு நடந்த விசாரணையில் சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நடிகை விஜயலட்சுமி 2011ல் அளித்த புகாரைத் திரும்பப் பெறுவதாகக் கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீஸார் இந்த வழக்கை முடித்து வைத்ததாகவும் இருப்பினும் இப்போது மீண்டும் விசாரணை எனச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
திராவிட கொள்கைக்கு எதிராகவும் அரசியல் ரீதியாகக் கருத்துக்களைக் கூறி வருவதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. 2011ல் முடிக்கப்பட்ட வழக்கை அரசியல் உள்நோக்கத்துடன் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போலீஸார் விசாரணைக்கும் நிலையில், இந்த விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் போலீஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 12 ஆண்டுகள் இந்த வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்று போலீஸாருக்கு கேள்வி எழுப்பினர். அதன்படி போலீஸார் விளக்கம் அளித்து அறிக்கை சமர்ப்பித்தனர். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி விடுமுறை என்பதால் வழக்கு நடைபெறவில்லை. இந்தச் சூழலில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.