ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டியதற்காக திமுக கூட்டணி பெருமிதம் கொண்டிருக்கிறது. டெபாசிட் இழக்காது கௌரவமாக தோற்றதற்காக அதிமுக கூட்டணி பெருமூச்சு விடுகிறது. ஆனால், தொகுதியை வென்றவரைவிட சுமார் 1 லட்சம் குறைவான வாக்குகளுடன், டெபாசிட் இழந்திருக்கும் நாம் தமிழர் கட்சி, உண்மையான வெற்றி எங்களுக்குத்தான் என்று மகிழ்கிறது. இடைத்தேர்தல் களத்தின் சகலத்தையும் கவனித்தவர்களுக்கு நாம் தமிழர் கொண்டாட்டத்தின் பொருள் புரியும்.
"நாங்கள் பெற்ற 10 ஆயிரம் சொச்ச வாக்குகளும், திமுக - அதிமுக கட்சிகள் ’வாங்கிய’ வாக்குகளைவிட பல மடங்கு உயர்வானவை" என்று நாம் தமிழர் சொல்வதில் விஷயம் இருக்கிறது. பரிசுப் பொருள் எதையும் வழங்காது, பட்டியில் அடைக்காது, பிரியாணி புகட்டாது நாம் தமிழர் கட்சியினர் பெற்ற வாக்குகள், தமிழகத்தின் நடுநிலை வாக்காளர்களுக்கு நம்பிக்கை தந்திருக்கின்றன. இதுவே, வெறுப்பேற்றும் கழகக் கட்சிகளுக்கு மாற்றாக, மாற்று முகமாக சீமானை மக்கள் அடையாளம் காணத் தொடங்கியிருப்பதையும் காட்டுகிறது.
"இந்த நிலம் என் கையில் சிக்கட்டும்" என்று மேடை தோறும் கர்ஜிக்கும் சீமான் மீதான எதிர்பார்ப்புகளை மேலும் இவை அதிகரித்திருக்கின்றன. மெய்யாலுமே ஒருநாள் தமிழ் மண்ணின் ’அதிபராக’ சீமான் மாறுவாரா, அதற்கான சரியான பாதையில்தான் அவர் பயணிக்கிறாரா, அல்லது தன்னை நம்பி பயணிப்பவர்களை பணயமாக பயன்படுத்தி பிழைக்கிறாரா..? என்பதெல்லாம் சீமான் மீதான எதிர்பார்ப்பிலும், சீமானுக்கான எதிர்ப்பிலும் இருப்பவர்களின் நெடுநாள் ஐயங்கள்!
அண்ணன் சீமான்
திராவிடர் இயக்க மேடைகளிலும் பின்னர் திமுக மேடைகளிலும் தன்னை பட்டைத் தீட்டிக்கொண்ட சீமானின் பேச்சுத் திறனே அவரது அரசியல் ஒளிவட்டத்தின் பெரும் அடையாளமாக நிற்கிறது. சமகாலத்தில் சந்தேகமின்றி எந்த தமிழக அரசியல் கட்சித் தலைவருக்கும் சேராத வசீகரம் இது. ’அண்ணன் சீமான்’ என்றதும் இளைஞர்கள் நிமிர்ந்து அமர்கிறார்கள். மைக் பிடித்தால் மனிதர் மணிக்கணக்கில் பேசுகிறார். பேசுபவர் - கேட்பவர் இடையிலான பேதங்களை உடைத்து, தம்பிகளின் தோளில் கைபோட்டபோல அவரது பேச்சு ஆதுரமாக செல்கிறது. ’அவர் சொல்றதெல்லாம் சரிதானே’ என்று தாய்மார்களும் தலையாட்டுகிறார்கள்.
நாம் தமிழர் கட்சிக்கு முன்னதாக அதே பெயரிலான இயக்கத்தை கட்டமைத்ததில், சீமானின் அரசியல் அதிகாரபூர்வ அடியெடுப்பு தொடங்கி தற்போது 15 வருடங்களை எட்ட இருக்கிறார்கள். அவரையும் நாம் தமிழர் கட்சியையும் தமிழக அரசியல் களம் இன்று மூன்றாம் இடத்தில் நிறுத்தியிருக்கிறது. “12 வருடங்களுக்கு முன்னர் அடியெடுத்தோம், இதோ மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறோம்; இங்கிருந்து முதல் இடத்தை பிடிக்க எத்தனை காலமாகப் போகிறது?” என்று உற்சாகமாக சீமானின் தம்பிகள் கலந்து பேசுகிறார்கள். தம்பிகளின் எதிர்பார்ப்புக்கு மேடைதோறும் சீமானும் தூபம் இட்டு வருகிறார்.
சீமான் வழி தனி வலி!
தமிழக தேர்தல் களம் எதிலும் நேரிடையான கூட்டணியை மறுதலித்தே வந்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. ’சிங்கம் சிங்கிளாக களமிறங்கும்’ என்று சீமான் உறுமுவதற்கு தம்பிகள் சில்லறைகளை சிதற விடுகிறார்கள். ஆனால் வாக்கரசியலுக்கான சீமானின் வியூகங்கள் சற்று வளர்ந்த தம்பிகளுக்கு வியப்பை அளிப்பவை. அண்ணன் மெய்யாலுமே தேர்தலில் நின்று வென்று தமிழகத்தின் தலைவிதியை மாற்றும் ஆட்சியை அமைப்பாரா அல்லது காலமெல்லாம் இப்படி பேசியே கட்சியையும் தம்பிகளின் கனவுகளையும் கரைய விடுவாரா.. என்று குழம்புகிறார்கள். சீமான் உடும்பாய் நிற்கும் தனி வழியில், ஒவ்வொரு தேர்தல் களத்தில் வேர்வை சிந்தும் தம்பிகளின் வலிகளை அவர் உணர்ந்ததாக தெரியவில்லை.
அரசியல் பாலபாடம் முடிந்ததும் அவரிடமிருந்து விலகும் தம்பிகளின் எண்ணிக்கை அதிகமாவதும், நாதகவை சீமான் கட்டமைத்தபோது உடனிருந்தவர்கள் எவரும் இன்று அங்கே இல்லாததும் இந்த வலிகளையே உணர்த்துகின்றன.
ஓர் இயக்கமாக செயல்படுவதற்கும், அடுத்தக்கட்டமான வாக்கரசியலை நம்பிய அரசியல் கட்சியாக களத்தில் இறங்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இன்னமும் நாதக, சீமான் என்ற ஒற்றை பிரம்மாண்ட பிம்பத்தின் குரலை நம்பியே இயங்குகிறது. அவருக்கு அடுத்த கட்டத்தில் யார் இயங்குகிறார்கள், கட்சியில் யார் வளர்கிறார்கள், எவரை வளர்க்கிறார்கள் என்பதெல்லாம் தம்பிகளையே தடுமாறச் செய்பவை.
மாற்றுசக்தியா சீமான்?
திமுக - அதிமுக என கழகங்கள் மீது கசப்பு கொண்ட வாக்காளர்கள் எப்போதும் தமிழகத்தில் தனியாக உண்டு. விஜய்காந்த் போன்றவர்கள் அதனை நம்பியே இறங்கி தொடக்கத்தில் சாதிக்கவும் செய்தார்கள். அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய சீமான், கழகங்களுக்கு இணையாக கட்சியின் அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் ஏனோ சுணங்குகிறார். திமுக - அதிமுகவினருக்கு போட்டியான உள்கட்டமைப்பை நாதக எட்டாது நிற்கிறது. மெய்நிகர் உலகில் பொங்குவதற்கு அப்பால் தம்பிகள் தரப்பிலும், கட்சிக்கான அடித்தளத்தை உருவாக்குவதில் திணறுகிறார்கள். ஆர்வத்தோடு அண்ணன் சீமானின் அடியொற்றி பயணப்படுவோரில் பலர், அடுத்த சில வருடங்களில் புளிப்பும் கசப்புமாக மாற்றுக்கட்சிகளில் ஐக்கியமாகிறார்கள் அல்லது அரசியல் களத்திலிருந்து காணாமல் போகிறார்கள்.
பாஜக வேட்பாளரின் வாக்குகள் நோட்டாவுடன் ஒப்பிட்டு ஒரு கட்டத்தில் கிண்டல் செய்யப்பட்டது போல, தேர்தல் தோறும் டெபாசிட் இழப்பது தம்பிகளை சோர்வடையச் செய்கிறது. கட்டிய டெபாசிட் மீளப்பெறுவதையே வேட்பாளரின் இலக்காக்கும் அளவுக்கு நாதக கிண்டலுக்கும் ஆளாகிறது. மேலும் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியான இடத்தை நாம் தமிழருக்கு தமிழக மக்கள் தர முனைவதை அவர்கள் உள்ளபடி பயன்படுத்திக்கொள்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது. வாக்கரசியலில் அனைவரையும் உள்ளடக்கிய பயணம் அவசியம் என்பதை நாம் தமிழர் கட்சி ஏனோ அலட்சியம் செய்கிறது. ஈரோடு கிழக்கில் அருந்ததியர்களுடனான சர்ச்சை மோதலே இதற்குச் சாட்சி.
முரண்பாடுகளின் மூட்டை?
மொழி வழி பெரும்பான்மை வாதம் பேசுகிறது நாம் தமிழர் கட்சி. இது உட்பட நாதகவினர் முன்வைக்கும் வாதங்கள் பலவும், பிற்பாடு எங்கேயோ சிக்கவே செய்கின்றன. விஜயநகர ஆட்சி அமைத்தவர்களால் ஆந்திராவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களே அருந்ததியர்கள் என சீமான் முன்மொழிவதை தம்பிகளும் எதிரொலிக்கிறார்கள். தமிழ் மண்ணில் ’தூய்மை’ பணியில் ஈடுபட்டிருந்த ஆதிகுடிகள், விஜயநகர அரசுக்கு சேவகம் செய்ய மறுத்ததே இதற்கு காரணம் என்று உளறி வைத்ததில், மேற்படி ’தமிழ் ஆதிகுடிகளை’யும் சீமான் சீண்டி இருக்கிறார். இதர சமூகத்தினரைப் போன்றே ஏராளமான உட்பிரிவுகளை உள்ளடக்கிய அருந்ததியர்களில், தெலுங்கு, கன்னடம் அறியாது தமிழ் மட்டுமே பேசுவோரும் தமிழகத்தில் இருப்பதை சுட்டிக்காட்டியதும், ’அவர்கள் ஏன் என்னை ஆதரிக்க மறுக்கிறார்கள்’ என்று சீமான் சமாளிக்க முயல்கிறார்.
ஆந்திராவிலிருந்து வந்தவர்களாக சொல்லப்படும் சாதி இந்துக்களை கவனமாக தவிர்த்துவிட்டு, ஒடுக்கப்பட்டவர்களிலும் நலிந்தவர்களாக நிற்கும் அருந்ததியர்களை சீமான் குறிவைத்ததும் விமர்சிக்கப்படுகிறது. இது தவிர பல்வேறு மேடைகளில் சீமான் முன்வைக்கும் வாதங்கள் பலவற்றுக்கும் பிற்பாடு அவரே எதிராக திரும்பியிருக்கிறார். குறிப்பாக, திராவிடர் இயக்க மற்றும் திமுக மேடைகளில் தான் முழங்கியதற்கு எதிராகவே தற்போது சீமான் களமாடி வருகிறார். பெரியாரை புறக்கணிப்பது, குடிப்பெருமையின் பெயரால் சாதிப் பற்றினை வளர்ப்பது, எவர் தமிழர் என்பதை வரையறுப்பது என சீமான் கையிலிருக்கும் துலாக்கோல் தடுமாற்றத்துக்கு ஆளாகி வருகிறது. தனது பேச்சுத் திறனாலும் ’ப்ஹா..’ சிரிப்பாலும் முந்தைய முரண்பாடுகளை சமாளித்து வைக்கும் சீமானுக்கு, அவை எத்தனை காலம் கைகொடுக்கும் என்பது தெரியவில்லை.
ஆர்எஸ்எஸ் அடிவருடியா?
இவற்றுக்கு அப்பால் ’பாஜகவின் பி டீம்’ என்பது, சீமான் மீது திமுகவினர் வைக்கும் மிகப்பெரும் குற்றச்சாட்டாக நீடிக்கிறது. திமுகவை முழு மூச்சாக எதிர்க்கும் அளவுக்கு பாஜக எதிர்ப்பில் சீமான் இறங்குவதில்லை என்றும், சீமானின் கொள்கைகள் பலவும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களின் முலாம் பூசிய வடிவமே என்பதும் அவரது முன்னாள் தோழர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. சீமான் பேச்சு, செயல்பாடு ஆகியவற்றின் ’மானே தேனே’ நீக்கிவிட்டால் ஆர்எஸ்எஸ் சிந்தனைகளின் சாயல் பல்லிளிக்கும் என்று இவர்கள் சாடுகிறார்கள்.
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஆதாயம் பெற்றதாக சீமான் மீது நீண்ட கால புகார்கள் உண்டு. அடுத்தபடியாக ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளுக்கு துணை போவதன் மூலமாக தம்பிகளை தவறாக வழி நடத்துவதாகவும், சீமானின் முன்னாள் தம்பிகளே தீவிரமாக புலம்புகிறார்கள். இப்படியான ஆதாயங்களில் திருப்தியாகும் சீமான், அதன்பொருட்டே தேர்தல் வியூகங்களில் வாய்ச்சவடாலுக்கு அப்பால் முன்னேற மறுக்கிறார் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ’சரிபாதி பெண்களை வேட்பாளர்களாக களத்தில் நிறுத்துவது, வாக்காளர்களிடம் கட்சியின் கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகளை மட்டுமே முன்னிறுத்துவது’ உள்ளிட்டவை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரை நாம் தமிழரின் தனித்துவ அடையாளங்களாக இருக்கின்றன. ஆனால் இவற்றுக்கு அப்பால் தேர்தல் வெற்றி மற்றும் வியூகங்கள் குறித்து சீமான் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.
அதிபர் ஆளப்போவது எப்போது?
’என்னுடைய வாக்காளர்கள் பள்ளிக்கூடங்களில் இருக்கிறார்கள்’ என்று சீமான் அடிக்கடி சொல்வார். அவை ஒரு வகையில் உண்மையும் கூட. சீமானின் கூட்டத்துக்கு திரளும் இளைஞர்களும், அவர்களின் முகங்களில் தாண்டவமாடும் உணர்ச்சிகளுமே அதற்கு அத்தாட்சி. ஆனால் ஒரு சில வருடங்களில் சீமானின் உரையும், அரசியல் நகர்வுகளும் அவர்களுக்கு சலிப்பு தட்டுகின்றன. இதர கட்சிகளைவிட தீவிரமாகவும், அவர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும், சமூக ஊடக களங்களில் செயல்படும் தம்பிகளின் உழைப்பும், ஈடுபாடும் அதீதமானது. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு வலு சேர்க்கும் வகையில் தேர்தல் களத்தில் அடுத்தக்கட்டத்தை நோக்கி சீமான் நகர்வது பெரும்பாடாகி வருகிறது.
சீமானின் கூட்டத்துக்கு திரள்வோர் மற்றும் அவரது காணொலிகளில் மெய்சிலிர்ப்போரில் குறிப்பிட்ட சதவீதம் வாக்காக மாறினாலே, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வெற்றி எளிதில் அடுத்தக்கட்டத்தை நோக்கி முன்னேறி இருக்க முடியும். குறிப்பாக , திமுக - அதிமுகவினருக்கு மாற்றாக தாங்கள் தவிர்க்க முடியாத இடம் பிடித்திருப்பதை, நாதக கொண்டாடுவதிலும் அர்த்தம் சேரும்.
தமிழ் நிலத்தை ஆளப்போகும் அதிபராக தன்னை சதா முன்னிறுத்தும் சீமான், அதற்கான தருணத்துக்காக மர்மப் புன்னகையுடன் காத்திருக்கிறார். அதில் தனிப்பட்ட ஆதாயங்கள் மட்டுமே இருக்கிறதா அல்லது இந்த தமிழ் மண்ணுக்கான ஒட்டுமொத்த மீட்சி பொதிந்திருக்கிறதா என்ற ரகசியத்தையும் அவர் மட்டுமே அறிவார்!