எவருடைய மாய மான், சீமான்?

பெரும் விவாதத்துக்கு ஆளான சிறுபான்மையினர் குறித்த சீமான் குரல்!
சீமான்
சீமான்

சிறுபான்மையின வாக்காளர்கள் குறித்து சீமான் எழுப்பிய கேள்விகள், சர்ச்சைக்கு ஆளானதோடு அரசியல் மட்டத்தில் பெரும் விவாதத்துக்கும் வித்திட்டிருக்கிறது.

சிறுபான்மையினரை குறிவைக்கும் பெரும்பாடுகள்

தேசிய மற்றும் மாநில அரசியல் களங்கள் எதுவாயினும், சிறுபான்மையின வாக்காளர்கள் என்றாலே மிகுந்த எச்சரிக்கையோடு அரசியல் தலைவர்கள் அணுகுவதே வழக்கம். சிறுபான்மையினர் வசம் ஏக கரிசனத்தோடு, அவர்களின் ரட்சகர் மற்றும் மீட்பராக தங்களை முன்னிறுத்திக் கொள்ளவும் அந்த தலைவர்கள் பிரயத்தனம் மேற்கொள்வார்கள். இதன் மறுபக்கத்தில் சிறுபான்மையினர் என்ற தரப்பை புனிதப் பசுவாக பாவித்து ஏக எச்சரிக்கையுடன் அவர்களை கையாள்வதும் நடக்கும். பெரும்பான்மைவாதத்தின் வழி நடப்பதாக விமர்சனத்துக்கு ஆளாகும் பாஜகவும், சிறுபான்மையினர் மீதான தங்களது கரிசனத்தை அவ்வப்போது வலிய நிரூபித்தே வருகிறது.

இஸ்லாமியர் அரசியல் மேடையில் சீமான்
இஸ்லாமியர் அரசியல் மேடையில் சீமான்

வாக்கு வங்கியை குறிவைக்கும் தேர்தல் அரசியலில் தவிர்க்க இயலாத இந்த மாயத்தை பகிரங்கமாக உடைத்ததில் சீமான் மாறுபட்டிருக்கிறார். சிறுபான்மையினரை விமர்சித்ததோடு, அதன் உச்சமாக அவர்களை சாத்தானின் பிள்ளைகள் என்றதும், எந்த பிரச்சினைகளுக்கு போராட சிறுபான்மையினர் முன்னின்று இருக்கின்றனர் என கேள்வி எழுப்பியதும், அரசியல் பொதுதளத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. அதிர்ந்தவர்களில் நாம் தமிழர் கட்சியின் தம்பிகளும் அடங்குவார்கள்.

மணிப்பூர் அவலம் தொடர்பான சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் பங்கேற்ற சீமான், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட கிறிஸ்துவ குக்கி இன மக்களுக்கான பேச்சினூடே, சிறுபான்மையினருக்கு எதிரானதாக மடை திரும்பினார். ’பேரன்பின் அடிப்படையிலான பெருங்கோபத்தின் வெளிப்பாடு’ என்றும், தனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது குறித்தும் பிற்பாடு சீமான் விளக்கமளித்தாலும் சர்ச்சைகள் ஓயவில்லை. தேர்தல் அரசியல் களத்தில் சிறுபான்மையினர் நிலைப்பாடுகள் என்பது முதல், சீமானின் உண்மை முகம் இதுதான் என்பது வரை அந்த சர்ச்சைகள் வெகுவாய் அரைபட்டு வருகின்றன.

சிறுபான்மையினருக்கு எதிரானவரா சீமான்?

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து வாக்களிக்கும் சிறுபான்மையின வாக்காளர்களுக்கு எதிராகவே சீமான் கொதித்துப் பொங்கினார். அதுவே, பொதுவெளியில் ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கு எதிராகவும் சீமான் பேசியதாக திரிந்தது. ”சிறுபான்மையினருக்கு தொடர்ந்து துரோகம் செய்யும் கட்சிகளுக்கு கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம்களின் 18 சதவீத ஓட்டு ஏன் செல்ல வேண்டும், அந்த ஓட்டுகள் எனக்கு ஏன் கிடைக்கவில்லை” என்ற சீமானின் ஆதங்கமே அவரது பேச்சில் வெளிப்பட்டிருக்கிறது. அதற்காக தனது வழக்கமான பாணியில் உஷ்ணம் கொண்டதும், அது தொடர்பான பிறிதொரு விளக்கத்தில் காலணியை கழற்றி அடிப்பேன் என்று தரமிழந்ததும் அவருக்கு எதிராக திரும்பின.

சீமான்
சீமான்

இவற்றின் உச்சமாக, ஈழத்தில் இஸ்லாமியருக்கு எதிராக தீவிர நிலைப்பாடு கொண்டிருந்த எல்டிடிஈ அமைப்பின் எதிரொலிப்பாக, அந்த இயக்கத்தை முழு மூச்சாக ஆதரிக்கும் சீமானும் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. சீமான் சுதாரித்து அதற்கு விளக்கமளித்த பிறகும் சர்ச்சைகள் அடங்கியபாடில்லை. ஆர்எஸ்எஸ் மற்றும் தீவிர இந்துத்துவத்தின் நீர்த்த வடிவமாகவே சீமானின் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கொள்கைகள் அமைந்திருப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கும்போது, அவரது தற்போதைய ’சாத்தான்’ குரல் நாம் தமிழர் கட்சியை வெகுவாய் பதம் பார்த்திருக்கிறது. சிறுபான்மையினருக்கு எதிரானவர் சீமான் என்ற வாதம் தற்போது அரசியல் தளத்தில் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பெரும்பான்மைவாத பிடிவாதம்

”நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டால், சிறுபான்மையினத்தவர் எனக்கு வாக்களித்து விடுவார்களா” என்ற எகத்தாளமான சீமானின் அடுத்த பேச்சும், அவரின் முகமூடியை அகற்றியிருப்பதாக புகாருக்கு ஆளாகச் செய்தது. அருந்ததியர் சமூக மக்களை வந்தேறிகள் என்று ஏசியதான பழி சீமான் மீது விழுந்தபோதும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் அம்மக்களுடன் நாம் தமிழகர் கட்சியினர் நேரடியாக மோதியபோதும் அவர் இதே போன்ற கேள்வியை எழுப்பினார். “அருந்ததியின மக்கள் எனக்கு வாக்களிக்காது, ஏன் திமுகவுக்கு வாக்களிக்கின்றனர்?” என்று கொக்கி போட்டார்.

சீமான்
சீமான்

இந்தக் குரல், ’பெரும்பான்மை இந்துக்கள் எங்களுக்கு வாக்களித்தால் போதும்’ என்று சிறுபான்மையினத்தவரை பொருட்படுத்தாத பாஜக ஆதரவு வலதுசாரிகளின் குரலையே எதிரொலித்தது. பாஜகவின் பி டீம் என்றும், பாஜக ஆதரவு வியூக விற்பன்னர்கள் போட்டுத் தரும் திட்டங்களை செயல்படுத்துவே சீமானின் பிரதான அரசியல் பணி என்றும் விமர்சனங்கள் அவரை குறிவைத்திருக்கையில், அதே பாணியில் சீமான் பெரும்பான்மைவாதத்தை கையில் எடுத்திருப்பது, அவரை அடுத்த சர்ச்சையில் தள்ளியது. எனக்கு வாக்களிக்காத சிறுபான்மையினத்தவரை நானும் பொருட்படுத்தப் போவதில்லை என்ற சீமானின் நிலைப்பாடு பகிரங்கமாக வெளிப்பட்டிருக்கிறது.

தடுமாறும் சீமான், ஏமாறும் தம்பிகள்

இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே பேசிக்கொண்டிருப்பார் சீமான்? என்ற அலுப்பு சாமானியர்கள் மட்டுமல்ல; கட்சியிலிருக்கும் தம்பிகளையும் தடுமாறச் செய்து வருகிறது. சீமானின் சீற்றம் மிகுந்த பேச்சுக்கள் மற்றும் மாறும் வாதங்களுக்கு முட்டுக்கொடுக்க, புதிய விளக்கங்கள் மற்றும் அரசியல் சமூகக் கூறுகளை அவர்கள் கட்டமைக்க வேண்டியிருக்கிறது. இவற்றால், நாதகவின் இதே பாதை எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்ற சலிப்பில், இதர அரசியல் கட்சிகளுக்கு தாவும் தம்பிகள் அதிகரித்து வருகின்றனர். அதனால் தனக்கு அடுத்த இடத்தில் சொல்லும்படியான இரண்டாம் கட்டத் தலைவர் எவரும் இல்லாத பிரதான கட்சியாக நாதக தம்பிகளை சீமான் தடுமாறச் செய்து வருகிறார்.

பிரதான திராவிட கட்சிகளுக்கு பதிலியாக, ஒரு மாற்று அரசியல் சக்தியை எதிர்பார்க்கும் தமிழக இளைஞர்களை சீமான் எளிதில் வசீகரித்து விடுகிறார். கொள்கை என்ற பெயரில் அவர் குழப்பியடித்தாலும், அவற்றின் சாயம் கரையும்போது சனாதன வலதுசாரிகளின் இன்னொரு பல்லிளிப்பதும் பொதுவெளியில் பழகிப் போயிருக்கிறது. திமுக, அதிமுகவுக்கு அப்பால் சுமார் 7 சதவீத வாக்காளர்கள் ஆதரவுடன் தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரும் இயக்கமாக நாம் தமிழர் கட்சியை வளர்த்தெடுத்திருக்கும் சீமான், அதற்கு மேல் அதனை செலுத்தவொடாது அவரே வேகத்தடையாகி நிற்கிறார். வீதிகளில் எதிரொலிக்கும் சீமானின் குரலை, அவர் சார்பிலான, எம்எல்ஏ, எம்பி என மக்கள் மாமன்றங்களில் எதிரொலிக்கும் ஆவல் அவருக்கு இருப்பதாகவே தெரியவில்லை.

சீமான்
சீமான்

எவருடைய மாய மான், சீமான்?

குறிப்பிட்ட தரப்பினருக்கான வாக்குவங்கியை பிராய்ந்து எடுப்பதில் மட்டுமே சீமான் மும்முரம் காட்டுவதான குற்றச்சாட்டு, தற்போதைய சிறுபான்மையின வாக்காளர்கள் குறித்த சீமானின் பேச்சிலும் வெளிப்பட்டிருக்கிறது. சிறுபான்மையினத்தவரை முக்கிய வாக்குவங்கியாக கொண்டிருக்கும் திமுக - காங்கிரஸ் கட்சிகளை சீமான் குறிவைத்திருக்கிறார். இந்த வகையில், தனது பேச்சுக்கு முதலில் சீறிய சிறுபான்மையின வாக்காளர்களை பிற்பாடு யோசிக்கவும் செய்திருக்கிறார் சீமான். இந்த நிலைப்பாடுகளுக்காக ஆர்எஸ்எஸ் அடிவருடி என்று எழும் புகாருக்கும் சீமான் அலட்டிக்கொள்வதில்லை. ஆனபோதும், தனது தீவிர பாஜக எதிர்ப்பு நிலையை உறுதி செய்யஅடிக்கடி அக்கட்சி மற்றும் அதன் ஆட்சியின் செயல்பாடுகளை காட்டமாக தாக்கவும் செய்கிறார்.

மெய்யியல் கோட்பாடு, மொழி - இனம் அடிப்படையிலான சமூகப் புரட்சி, தமிழ் மற்றும் தமிழரை முன்னிறுத்தும் தமிழ் தேசியம் என சீமான் முன்வைக்கும் அனைத்தும் பெருவாரியான இளைஞர்களை ஈர்க்கவே செய்கின்றன. ஆனால், அடுத்த கட்டத்துக்கு நகராது புதிய சர்ச்சைகளில் சிக்குவதும், எவருக்கோ செயல்படுவது போன்ற தொனியை உருவாக்குவதும் சீமான் சலிப்பை உருவாக்கவே செய்கிறார். அரசியல் பொதுவெளியின் கவனத்தை திசை திருப்பவும், குறிப்பிட்ட பிரச்சினைகளை நீர்க்கச் செய்யவும், எவருடைய மாய மானாக சீமான் செயல்படுகிறார் என்ற புகார்கள் இனி வலுக்கவே செய்யும்.

மறுபக்கத்தில், சிறுபான்மையின வாக்காளர்களை நோக்கி சீமான் எழுப்பியிருக்கும் தற்போதைய கேள்விகளும், நிச்சயம் அவர்களை யோசிக்கவும் வைத்திருக்கிறது. ஆனால், அதில் அவர் எதிர்பார்த்த அவருக்கான ஆதாயம் ஏதுமில்லாது போவதுதான் சீமானின் சரிவாக தொடர்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in