அகிலேஷுடன் ரகசிய சந்திப்பு... சமாஜ்வாதி சார்பில் களமிறங்கும் பாஜக பெண் எம்பி மகன்?

பாஜக எம்பி ரீட்டா பகுகுணா ஜோஷியுன் மகன் மயாங் மிஸ்ரா
பாஜக எம்பி ரீட்டா பகுகுணா ஜோஷியுன் மகன் மயாங் மிஸ்ரா

தேர்தல் வந்தால் அரசியல்வாதிகளுக்கு எந்த கட்சியும் முக்கியமில்லை என்பது போல் ஒரு சூழல் உத்தரப்பிரதேசத்தில் உருவாகிறது. பாஜகவின் ரீட்டா பகுகுணா ஜோஷியின் மகனுக்கு தம் கட்சியில் வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால் சமாஜ்வாதியில் சேர்ந்து போட்டியிட சம்மதிப்பதாகத் தெரிகிறது.

முன்னாள் மத்திய அமைச்சருமான ரீட்டா பகுகுணா ஜோஷி, சட்டப்பேரவை தேர்தலில் மகன் மயாங் மிஸ்ராவிற்கு வாய்ப்பு கேட்டு வலியுறுத்தி வந்தார். இதற்கு, மயாங் போன்ற அரசியல் வாரிசுகளுக்கு, ‘குடும்பத்திற்கு ஒருவர்’ என நிபந்தனையை காட்டி மறுத்துவிட்டது பாஜக. அதேபோல், ரீட்டா எம்.பியாக உள்ளதால், மகன் மயாங்கிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதன் காரணமாக மிகவும் கவலைகொண்டவர் தன் மகனுக்காக எம்.பி பதவியையும் துறக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தும் பலன் கிடைக்கவில்லை.

இந்நிலையில், மயாங் மிஸ்ராவிற்காக சமாஜ்வாதியின் கதவுகள் திடீர் எனத் திறக்கப்பட்டுள்ளன. பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சி என்பதையும் பொருட்படுத்தாமல் மயாங், தலைவர் அகிலேஷ்சிங் யாதவுடன் ரகசிய சந்திப்பு நடத்தியதாகவும் தெரிகிறது. இதையடுத்து, மயாங் மிஸ்ராவிற்கு லக்னோவின் ராணுவக் குடியிருப்பு தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் கருதப்படுகிறது.

அகிலேஷ்
அகிலேஷ்

இதே தொகுதியில் கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் ரீட்டா பகுகுணா வெற்றி பெற்றிருந்தார். இங்கு அவர் சமாஜ்வாதியின் வேட்பாளரும் அக்கட்சியின் நிறுவனர் முலாயம்சிங்கின் இளைய மருமகளுமான அபர்னா யாதவை தோல்வியுறச் செய்திருந்தார். மீண்டும் 2019 மக்களவை தேர்தலில் ரீட்டா வென்று அதன் மக்களவை தொகுதி எம்.பியானார். இந்த தேர்தலில் அபர்னா யாதவ், பாஜகவில் இணைந்துவிட்டார். மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை எதிர்நோக்கியவருக்கு பாஜகவால் தரப்படவில்லை.

உபி பாஜகவின் முக்கியத் தலைவராக இருப்பவர் ரீட்டா பகுகுணா ஜோஷி. முன்னாள் காங்கிரஸ் முதல்வரான ஹேம்வதி நந்தன் பகுகுணாவின் மகளான இவர், 1995 முதல் 2000 வரை காங்கிரஸின் அலகாபாத் மேயராக இருந்தார். 2003 முதல் 2012 வரை உபி மாநிலக் காங்கிரஸ் தலைவராகத் தொடர்ந்தார். 2014 மக்களவை தேர்தலில் தலைநகரான லக்னோ தொகுதியில் போட்டியிட்டவர் தோல்வியுற்றார்.

இதனால், 2016 இல் பாஜகவில் இணைந்தவர். 2019 தேர்தலில் அலகாபாத்தின் மக்களவை எம்.பியானார். ரீட்டாவின் மகனான மயாங் மிஸ்ராவும் கடந்த பத்து வருடங்களாகப் பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தார். சமாஜ்வாதியில் இணைய உள்ளவருக்கு தன் தாய் போட்டியிட்டு வென்ற லக்னோ ராணுவக் குடியிருப்பு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. இதற்காக, தனது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அர்மான் மல்லீக்கை மாற்றி தலைவர் அகிலேஷ் சமாஜ்வாதி சார்பில் மயாங்கிற்கு வாய்ப்பளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in