ஜெகத்ரட்சகன் வீட்டில் 2வது நாளாக தொடரும் சோதனை

ஜெகத்ரட்சகன் வீட்டில் 2வது நாளாக தொடரும் சோதனை

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீடு, அவருக்கு சொந்தமான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

ஜெகத்ரட்சகன்
ஜெகத்ரட்சகன்

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் திமுக எம்.பியும், தொழிலதிபருமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய வீடு, அலுவலகங்களில் நேற்று காலை முதல் 200க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைப்பெற்று வருகிறது.

சென்னை தி.நகரில் உள்ள ஜெகத்ரட்சகனின் அலுவலகம், குரோம்பேட்டையில் உள்ள வீடு மற்றும் அண்ணாநகரில் இருக்கும் பிரபல ஐஏஎஸ் பயிற்சி மையம், பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரி உட்பட ஜெகத்ரட்சகன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

நேற்று முன்னாள் திமுக அமைச்சர் செங்குட்டுவனின் மகன்கள், மகள் உள்ளிட்ட 4 பேருக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது தொண்டர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு மீதான வழக்குகள் என தொடர்ந்து திமுக அமைச்சர்கள் விசாரணை வளையத்திற்குள் உள்ள நிலையில், தற்போது திமுக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகங்களில் சோதனை நடைப்பெற்று வருவது தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு, ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகங்களில் நடைப்பெற்ற சோதனையின் போது, கணக்கில் வராத பணம் ரூ.15 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டாவது நாளாக சோதனை நடைபெறுகிறது. குறிப்பாக ஜெகத்ரட்சகனின் வீட்டில் அதிகாரிகள் அங்கேயே தங்கியிருந்து விடிய விடிய சோதனை செய்த நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.

பூந்தமல்லி மருத்துவமனை, வாலாஜாபாத் மதுபான ஆலை உள்ளிட்ட 30 இடங்களில் இன்று சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நிறைவடைந்த பின்னரே முழு விவரமும் தெரிவிக்கப்படும் என்று நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in