முகேஷ் அம்பானிக்கு 'இசட்+' பாதுகாப்பு ஏன்?: விவரங்கள் கேட்ட உயர்நீதிமன்றம்; தடைவிதித்த உச்சநீதிமன்றம்

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள இசட்+ மற்றும் ஒய் + பாதுகாப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனு தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பிய திரிபுரா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று நிறுத்தி வைத்துள்ளது.

நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச், உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்து இந்த வழக்கில் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உள்ள அச்சுறுத்தல் மற்றும் மதிப்பீட்டு அறிக்கை தொடர்பாக உள்துறை அமைச்சகம் பராமரிக்கும் அசல் கோப்பின் விவரங்களைக் கேட்டு திரிபுரா உயர்நீதிமன்றம் மே 30 மற்றும் ஜூன் 21 அன்று இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தது. நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், பொதுமக்களின் பணம் மற்றும் காவல்துறை தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

பொதுநல வழக்குகளை விசாரிக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. விசாரணையின் போது, ​​மத்திய அரசின் சார்பில் ஆஜரான இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஒரு குடும்பத்துக்கு வழங்கப்படும் பாதுகாப்பு என்பது பொது நலன் சார்ந்த பிரச்சினையாக இருக்க முடியாது” என்றார். உள்துறை அமைச்சகம் தனது மேல்முறையீட்டில், இதுபோன்ற ஒரு பொதுநல வழக்கை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவே கூடாது என்று கூறியிருந்தது. அம்பானி திரிபுராவில் வசிப்பவர் அல்ல என்றும் வாதிடப்பட்டது.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

அம்பானியின் பாதுகாப்பு பாதுகாப்பு குறித்த முக்கிய விவரங்கள்:

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு Z+ பாதுகாப்பு மற்றும் அவரது மனைவி நிதா அம்பானிக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்படுகிறது, அதற்காக அவர்கள் பணம் செலுத்துகிறார்கள். Z+ என்பது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இன்னும் முக்கிய பதவிகளில் உள்ள சிலருக்கு மட்டுமே வழங்கப்படும் மிக உயர்ந்த பாதுகாப்பு ஆகும்.

இதன் கீழ், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த சுமார் 50-55 ஆயுதமேந்திய கமாண்டோக்கள் 24 மணி நேரமும் காவலில் இருப்பார்கள். குண்டு துளைக்காத கார், மூன்று ஷிப்டுகளில் எஸ்கார்ட் மற்றும் தேவைப்படும் போது கூடுதல் பாதுகாப்பும் இவர்களுக்கு வழங்கப்படும். தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்புப் படையின் (NSG) கமாண்டோக்களின் கூடுதல் பாதுகாப்பும் அளிக்கப்படும்.

இசட்+ பாதுகாப்பில் உள்ளவர்கள் நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் அதிநவீன ஆயுதங்களுடன், கமாண்டோக்களுடன் ஒரு பைலட் மற்றும் பின்தொடர்தல் வாகனங்கள் எப்போதும் அவர்களுடன் செல்லும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in