யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: காரணம் இது தான்

யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: காரணம் இது தான்

சவுக்கு சங்கர் மீதான தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளின் கீழ் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதித்துறையில் ஊழல் படிந்து இருப்பதாக யூடியூப்பர் சவுக்கு சங்கர் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. கடந்த செப்.15-ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு அன்று இரவே கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

கடலூர் மத்தியச் சிறையிலிருந்து வரும் சவுக்கு சங்கரை,   பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்குத்  தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சவுக்கு சங்கர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து சிறை நிர்வாகத்தின் செயலைக் கண்டித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தனது மகனை அரசியல் காரணங்களுக்காகப் பழி வாங்க வேண்டாம் எனச் சவுக்கு சங்கரின் தாயார் கமலா தமிழக முதல்வருக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்நிலையில் சவுக்கு சங்கர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரியும், அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் சவுக்கு சங்கர் தரப்பில்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு  நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும்,  சிறையிலிருந்து வெளிவந்த பின் அடுத்த விசாரணை வரை சவுக்கு சங்கர் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர். மேலும், சவுக்கு சங்கர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர், மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலர் ஆகியோர் பதிலளிக்குமாறும்  நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதையடுத்து சவுக்கு சங்கர் நேற்றே விடுதலையாவார் என்று கருதப்பட்ட நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு காவல் துறையில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளால் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆவணங்களைக் கடலூர் மத்தியச் சிறை நிர்வாகத்திற்கு போலீஸார் நேற்றே வழங்கினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in