பம்மும் பாஜக... சதாய்க்கும் சத்யபால் மாலிக்!

தேசிய அரசியல் விசித்திரங்கள்
சத்யபால் மாலிக் - பிரதமர் மோடி
சத்யபால் மாலிக் - பிரதமர் மோடி

பாஜக எனும் யானையின் காதில் ஏறிய எறும்பாகி இருக்கிறார் சத்யபால் மாலிக். விவசாயிகள் போராட்டம் தொடங்கி புல்வாமா தாக்குதல் சம்பவம் வரை, பாஜகவினரை சத்யபால் மாலிக் தொடர்ந்து சங்கடத்துக்குள் ஆளாக்கி வருகிறார்.

“பிரதமர் மோடி ஒரு திமிர் பிடித்தவர்... ‘40 ராணுவ வீரர்கள் பலியான புல்வாமா தாக்குதலை மோடியும் அமித் ஷாவும் தங்களது வாக்கு அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டனர்” என்றெல்லாம் மாலிக் வீசும் குண்டுகள், பாஜக முகாமை பதற வைக்கின்றன. எதிரிகளை உண்டு இல்லையென தெறிக்க விடும் பாஜக தலைமையை, தோழனாக வளர்ந்த சத்யபால் மாலிக் அலற விடுகிறார்.

யாரிந்த சத்யபால் மாலிக் என்ற சாமானியரின் விசாரிப்பில் தொடங்கி, இவரால் எதிர்வரும் மக்களவை தேர்தல் வெற்றி பாதிப்புக்கு ஆளாகுமா என்ற பாஜகவின் பயம் வரை, தற்போதைய தேசிய அரசியல் அரங்கின் சுவாரசியங்கள் விசித்திரமானவை.

மாலிக்; அமித் ஷா - மோடி
மாலிக்; அமித் ஷா - மோடி

சரண்சிங் - விபிசிங் வழி வந்தவர்

மீரட் பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவராக எழுபதுகளில், தனது அரசியல் இன்னிங்ஸை தொடங்கியவர் சத்யபால் மாலிக். சரண்சிங் கவனம் கவர்ந்ததில் உத்தரபிரதேச சட்டப்பேரவை உறுப்பினரானார். அதன் பின்னர் ராஜிவ் காந்தி காலத்து காங்கிரஸ் கட்சியில் அருண் நேருவுடன் இணக்கமானார். அப்படியே ராஜ்ய சபா எம்பியாக உயர்ந்தார்.

காங்கிரசை விட்டு விலகிய வி.பி.சிங் , ஜன் மோர்ச்சா மற்றும் ஜனதா தளம் என பயணித்தார். விபிசிங் வழியை அருண்நேரு பின்தொடர, அருண்நேருவுடன் மாலிக்கின் அரசியல் திசையும் திரும்பியது. அலிகார் எம்பியாக அதிக ஓட்டு வித்தியாசத்தில் மாலிக் ஜெயித்தது, அப்போது பெரிதாக பேசப்பட்டது. ஆனால், மாலிக் எதிர்பார்த்த அரசியல் வளர்ச்சி அங்கே கிடைக்கவில்லை.

எனவே காங்கிரஸ், ஜனதா தளத்துக்கு அப்பாலான அப்போதைய அரசியல் வாய்ப்புகளை ஆராய்ந்ததில், வளர்ந்து வந்த பாஜக அவரை ஈர்த்தது. உபி மாநிலத்தின் மிகப்பெரும் வாக்கு வங்கியான ஜாட் சமூகத்தின் பிரதிநிதியாகவும், துடிப்பான சமூகக் கருத்துக்களை வெளிப்படுத்தும் மாலிக்கின் போக்கும், அப்போதை பாஜக தலைவரான நிதின் கட்கரியை ஈர்த்தது.

கட்கரி மட்டுமன்றி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜகவின் டெல்லி தலைவர்களுடன் மாலிக் அனுசரணையுடன் அரசியலில் பயணித்தார். அவரது நிம்மதி நீண்ட காலம் நீடிக்கவில்லை. குஜராத்திலிருந்து மோடி - அமித் ஷா இணை டெல்லிக்கு வந்ததில் தடுமாற்றம் கண்ட பாஜக தலைவர்களில் மாலிக்கும் சேர்ந்தார்.

கலகக்குரலோன்... பராக்

குஜராத்தை வளர்ச்சி மாநிலமாக முன்னிறுத்தி, அதன் வழியில் தேசத்தை கட்டமைக்கப்போவதாக சூளுரைத்த மோடி - அமித் ஷாவுக்கு தேசம் வாய்பிளந்தது. அதுவரை கட்சியில் ஆதிக்கம் செலுத்திய, நிதின் காட்கரி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட, அவர்களை நம்பியிருந்த சத்யபால் மாலிக், தன்னுடைய அரசியல் அடையாளம் மீண்டும் நசிவதை காணச் சகியாதிருந்தார்.

பாஜகவின் ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லாத அரிதான தலைவர்களில் சத்யபால் மாலிக்கும் ஒருவர் என்பதால், மென்மேலும் புறக்கணிப்புக்கு ஆளானார். அப்போதுதான் மாலிக் உள்ளிருந்து கலகக்குரலோன் வீரியத்தோடு புறப்பட்டார்.

இயல்பாகவே துடுக்கானவர் மாலிக். தான் சார்ந்த ஜாட் இனத்தின் வாழ்வாதாரமான வேளாண் மற்றும் பால்வளத்துக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இதனால் உபியை தாண்டியும் வட மாநில விவசாயிகள் மத்தியில், அவருக்கு அரசியலுக்கு அப்பாலான செல்வாக்கு நீடித்தது. சத்யபால் மாலிக்கை ஓரம்கட்ட விரும்பினாலும், ஜாட் ஓட்டு வங்கியில் ஓட்டை விழுவதை விரும்பாத பாஜக தலைமை, மாலிக்கை கவர்னராக்கி சரிக்கட்ட பார்த்தது.

மாணவப் பருவத்திலிருந்து அரசியல் தணலில் வளர்ந்த சத்யபால் மாலிக்கால் இதனை செரிக்க இயலவில்லை. ஆனபோதும் தன்னை நம்பியவர்களுக்காக, கிடைத்த அங்கீகாரத்தை அவரால் இழக்கவும் முடியவில்லை. அப்படித்தான், பிஹார், ஜம்மு காஷ்மீர், கோவா, மேகாலயா என அடுத்தடுத்து மாநிலங்களின் ஆளுநரானார் சத்யபால் மாலிக்.

ஆளுநராக சத்யபால் மாலிக்
ஆளுநராக சத்யபால் மாலிக்

ராஜ்பவனில் ரகளை ராஜாங்கம்

மத்தியில் ஆளும் பிரதான கட்சியின் பிரதிநிதியாகவே ராஜ்பவனில் வீற்றிருக்கும் கவர்னர்கள் செயல்படுவார்கள் என்பதே நிதர்சனம். பாஜக அரசு நியமித்த ஆளுநரை மாற்றக்கோரி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் போராட்டங்கள் நடப்பது கண்கூடு. மாறாக, சத்யபால் மாலிக் ஆளுநராக வீற்றிருந்த மாநிலங்களில், பாஜகவினர் அலற ஆரம்பித்தனர்.

பிஹாரில் நிதிஷ்குமாருடன் இணைந்து கூட்டணி ஆட்சியிலிருந்த தெம்பில் பாஜகவினர் ஆட்டம் போட, சத்யபால் மாலிக் அதிரடி நடவடிக்கைகள் மூலம் அவர்களுக்கு சூடு வைத்தார். அதனால் அங்கிருந்து ஜம்மு காஷ்மீருக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஜம்மு காஷ்மீரின் புவி அரசியல் திருத்தி எழுதப்பட்டதற்கு சாட்சியாகவும் இருந்தார்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டது, யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது, இணையம் துண்டிக்கப்பட்டது என காஷ்மீர் பிராந்தியத்தின் பிரதான மாற்றங்களின்போது அங்கே மவுன சாட்சியாக இருந்தார் சத்யபால் மாலிக். ஆளுநராக தன்னை கலந்தாலோசிக்காது உள்துறை அமைச்சகம் முடிவுகளை செயல்படுத்துகிறது என புலம்பினார்.

அப்போது அவர் குரலை கேட்பார் யாருமில்லை. பின்னர் அரங்கேறிய புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து அப்போதும், இப்போதும் அவர் பேசுவதை இந்தியாவே அதன் பிறகு செவிமெடுத்து வருகிறது. அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் சத்யபால் மாலிக்கின் குரல், பாஜகவினரையும் பீதிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

புல்வாமா மற்றும் வேளாண் சட்ட சர்ச்சைகள்

அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சத்யபால் மாலிக், புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவத்தினர் கொல்லப்பட்டதன் பின்னணியில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் என முக்கியமானவர்களை சந்திக்கு இழுத்து விட்டிருக்கிறார்.

“துணை ராணுவப்படைகள் இடம்பெயர்வுக்கு வான்மார்க்க உதவி கோரப்பட்டும், உள்துறை அமைச்சகம் அதனை நிராகரித்தது. உளவு தகவல்கள் மற்றும் பாதுகாப்பில் கோட்டைவிட்டது தொடர்பாக முறையிட்டபோது, அமைதியாக இருக்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டார்” என்று ஆரம்பித்து, பல்வேறு சர்ச்சைகளை கூட்டி இருக்கிறார் சத்யபால் மாலிக்.

புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்கல் பெயரில் பாகிஸ்தான் எல்லைக்குள் துல்லிய தாக்குதல் நடத்தியதில், அடுத்து வந்த மக்களவை தேர்தலில் வாக்குகளை அள்ளியது பாஜக. அப்படியான அரசியல் வியூகத்தில் திட்டமிட்டே புல்வாமா சம்பவத்தில் அலட்சியம் காட்டியதாக, சத்யபால் மாலிக் வீசிய குற்றச்சாட்டுகள் பாஜக ஆதாரவாளர்களையும் துணுக்குறச் செய்திருக்கின்றன.

ஜம்மு காஷ்மீரின் கடைசி கவர்னராக இருந்த சத்யபால் மாலிக் கோவாவுக்கு மாற்றப்பட்டார். அங்கே ஆளும் பாஜகவினரின கனிமவள முறைகேடுகளை கேள்விக்குள்ளாக்கியதில், மேகாலயாவுக்கு மாற்றப்பட்டார். அப்போது மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் களைகட்டி இருந்தது. தனது அரசியலின் ஆரம்பகாலம் தொட்டே விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வரும் சத்யபால் மாலிக், இப்போது மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக சீறினார்.

சர்ச்சை சட்டங்களை வாபஸ் பெறுமாறு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். ‘500க்கும் அதிகமான விவசாயிகள் போராட்ட களத்தில் இறந்திருப்பதாக’ மாலிக் முறையிட்டபோது, பிரதமர் மோடி “அவர்கள் எனக்காகவா இறந்தனர்?” என்றாராம். இதனை அப்படியே பொதுவெளியில் போட்டுடைத்த மாலிக், “மோடி ஒரு திமிர் பிடித்தவர்” என்றார். இதையொட்டி சமாதானப்படுத்திய அமித் ஷா, “மோடி அப்படித்தான்; அவரை விடுங்கள்” என்று தொடங்கி பேசிய பலவற்றையும், அப்படியே பொதுவெளியில் மாலிக் அம்பலப்படுத்த, சிலகாலம் மோடி - அமித் ஷா இடையே பேச்சுவார்த்தை இல்லாத அளவுக்கு குழப்படியானது.

மாலிக் - மோடி -அஜித் தோவல்
மாலிக் - மோடி -அஜித் தோவல்

சத்யபாலுக்கு வாய்பூட்டு சாத்தியமா?

ஆனபோதும் பாஜகவில் யாராவது சத்யபால் மாலிக்கிற்கு எதிராக வாய் திறக்க வேண்டுமே. அவரது தீர்க்கமும், அரசியல் ஆதாயமற்ற பேச்சும், விவசாயிகள் - பொதுநலன் சார்ந்த குரலும், கட்சி பேதமின்றி பெருகியிருக்கும் ஆதரவாளர்களும்... மாலிக்கிற்கு எதிரானவர்களையும் வாய் மௌனிக்கச் செய்திருக்கிறது. இப்போதும் புல்வாமா சம்பவத்தை முன்னிறுத்தி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக பேசிய மாலிக்கை, சிபிஐ விசாரணை காட்டி பயமுறுத்த முடிகிறதே ஒழிய, கைது அளவுக்கு எல்லாம் முன்னேற முடியாது தவிக்கிறார்கள்.

சத்யபால் மாலிக்கை சிபிஐ விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள் என்றதும், ஆறு மாநிலங்களின் விவசாய சங்க பிரதிநிதிகள் டெல்லிக்கு படையெடுத்து விட்டனர். சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, என்ஐஏ என மத்திய விசாரணை அமைப்புகளை ஏவி, எதிர்க்கட்சிகளை தெறிக்கவிடும் பாஜக, அவற்றை முன்னாள் தோழனுக்கு எதிராக திருப்ப வழியின்றி விழிபிதுங்கி நிற்கிறது.

ஜம்மு காஷ்மீர் கவர்னராக இருந்தபோது ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பான புகாரில், மாலிக்கை விசாரிக்கப்போவதாக அறிவித்த சிபிஐ, அதற்கு அப்பால் முன்னேற முடியாது தவிக்கிறது. ஆனால், மாலிக் முன்னேறி வருகிறார். பாஜகவுக்குள் இருக்கும் மோடி எதிர்ப்பாளர்களை திரட்டி வருகிறார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மோடிக்கு பதிலாக ராஜ்நாத் சிங்கை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று மாலிக் தரப்பில் அழுத்தம் தரப்படுகிறது. கட்சியில், ஆட்சியில் மட்டுமன்றி எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியாவை கட்டமைத்து வரும் இறுமாப்பில் திளைத்திருக்கும் மோடி - அமித் ஷாக்கு இது பெருத்த ஷாக்!

தேர்தல் முடியும் வரை மாலிக்கிற்கு வாய்ப்பூட்டு போட என்ன வழி என்று ஆலோசித்து வருகிறார்கள். சிபிஐ, அமலாக்கத்துறைக்கு அப்பாலான அந்த வழியை ஆராயும் பாஜகவை, எதிர்க்கட்சிகளும் சுவாரசியமாக கூர்ந்து கவனித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளால் முடியாத சிலதை பாஜகவுக்குள் இருந்தபடி சத்யபால் மாலிக் சாதித்து வருவது, நடப்பு கால அரசியல் வினோதங்களில் விசித்திரமானது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in