பெர்சியாவிலிருந்து வந்த ‘இந்து’: சர்ச்சை கருத்தை வாபஸ் பெற்றார் கர்நாடக காங். தலைவர்

பாஜக போராட்டம்
பாஜக போராட்டம்

கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் மூத்த தலைவரான சதீஷ் ஜர்கிஹோலி, சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்த கருத்து தொடர் சர்ச்சைகளை உருவாக்கியது. எதிர்ப்புகள் வலுத்ததை தொடர்ந்து தனது கருத்தை அவர் திரும்ப பெற்றதுடன் வருத்தமும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆ.ராசா மொழிந்ததற்கு நிகரான சர்ச்சை ஒன்று கர்நாடக மாநிலத்திலும் முளைத்தது. மாநில காங்கிரஸ் செயல் தலைவரும் எம்எல்ஏ-வுமான சதீஷ் ஜர்கிஹோலி நவ.9 கூட்டமொன்றில் சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பினார். அவற்றில் ஒன்றாக ’இந்து’ என்ற பிரயேகத்தின் மூலம் குறித்தும் பேசினார். ’இந்து’ என்ற வார்த்தைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பில்லை என்றதோடு, வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வை முன்னிருத்தி ‘இந்து’ என்ற சொல் பெர்சியாவில் இருந்தே வந்தது என தெரிவித்தார்.

சதீஷ்
சதீஷ்

மேலும் பெர்சியாவில் ’இந்து’ என்ற வார்த்தைக்கு பொருள் என்ன தெரியுமா என்று கேட்டு சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தார். சதீஷ் தெரிவித்த இந்த கருத்து பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் தீயென பற்றியது. அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக பாஜகவினர் தொடர் போராட்டங்கள் நடத்தினார்கள். காங்கிரஸ் தலைமையிடம் இருந்தும் அதிகாரபூர்வ ஆட்சேபம் வந்தது.

இதனையடுத்து தனது கருத்து திரித்து புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும், இந்தியர்கள் மத்தியில் திணிக்கப்பட்ட இந்து என்ற வார்த்தை குறித்தும், இந்து மதம் குறித்தும் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சதீஷ் வேண்டிக்கொண்டார். ஆனால் அதன் பின்னரும் எதிர்ப்புகள் அதிகரிக்கவே, இன்று தனது சர்ச்சை கருத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தார். மேலும் வருத்தமும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு விளக்கமான கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார். சர்ச்சை கருத்தை திரும்ப பெறல், வருத்தம் தெரிவித்தல் ஆகியவற்றோடு, தனக்கு எதிராக திட்டமிட்டு அவதூறு கிளப்பப்படுவது குறித்து விசாரிக்க ஒரு கமிட்டி அமைக்கவும் சதீஷ் கோரியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in