
``வங்கக் கடலில் உருவாகியுள்ள மேன்டூஸ் புயல் இன்று இரவு 11.30 மணி அளவில் கரையை கடக்க உள்ளதாக அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில் அதற்கு முன்னதாகவே, பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்'' என்று சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வங்கக்கடலில் உருவாகியுள்ள மேன்டூஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகள் பெரும் பாதிப்படைந்துள்ளன.
குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் தொடுவாய் மீனவர் கிராமத்தில் கடல் நீர் உட்புகுந்ததால் 500க்கும் மேற்பட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். உணவு உண்ண கூட வழியில்லாமல் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. திமுக அரசு இவர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்து இரண்டு நாட்களுக்கு முன்பே பாதுகாப்பான இடங்களுக்கு தங்க வைத்திருந்தால் இது போன்ற நிலை ஏற்பட்டிருக்காது.
பல பகுதிகளிலும் நிவாரண முகாம்கள் பூட்டிக் கிடப்பதாகவும், அரசு அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு வெறுமனே எந்த உதவிகளையும் செய்யாமல் செல்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு எந்திரம் முற்றிலும் செயலிழந்து இயங்காமல் இருப்பதைத்தான் இது காட்டுகிறது. புரட்சித்தலைவி அம்மா ஆட்சி காலத்தில் சுனாமியின் போதே மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்து மக்களை பாதுகாத்தோம்.
இதேபோல மரக்காணம் அருகே கடல் சீற்றும் காரணமாக பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாகவும் படகுகள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்து தர வேண்டும். மேலும் கடலோர கிராமங்களில் இது போன்று நடக்காமல் பாதுகாத்திட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மாமல்லபுரம் பகுதியில் படகுகள் மற்றும் வலைகளை பாதுகாத்து வைத்திட இதுவரை தங்களுக்கு இடம் தரப்படவில்லை என்று அப்பகுதி மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அது குறித்து எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்று மீனவர்கள் வேதனைப்படுகின்றனர். தேவையான முன்னேற்பாடுகள் செய்திருப்பதாக திமுக அரசு சொல்லி வரும் நிலையில் பாதிப்புகளை தடுக்கும் முன்னேற்பாடுகளை செய்து தர வேண்டும்.
மேலும் சென்னையில் விடிய விடியப் பெய்த மழையின் காரணமாக வளசரவாக்கம், போரூர், வானகரம் உள்ளிட்ட பல இடங்களில் மழை நீர் தேங்கி சாலைகள் குளம் போல் காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்து மக்கள் அவதிப்படுகிறார்கள்.
பல்வேறு இடங்களிலும் மரம் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதம் அடைந்து மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக இதை சரி செய்து தர வேண்டும். நாகை மாவட்டத்தில் 26 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து கடலுக்குச் செல்லாமல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
எனவே தமிழக அரசு புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்குமிடம், உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை உடனே நிறைவேற்றிட வேண்டும். மேலும் தங்கள் வீடு உடைமைகளை இழந்து வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும். அதேபோல் பள்ளி, கல்லூரிகளுக்கு எந்த வித குழப்பமும் இல்லாமல் விடுமுறையை தெளிவாக முன்கூட்டியே அறிவித்திட வேண்டும்.
பாதிப்புக்குள்ளாயிருக்கும் பகுதிகளில் பொது மக்களுக்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் இன்று இரவு புயல் கரையை கடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் திமுக தலைமையிலான அரசு விழிப்புடன் செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.