
ஆறுமுகசாமி ஆணையத்தில் தங்கள் தரப்பு விசாரணையை நிறைவு செய்வதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தியது.
கடந்த வாரம் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தங்களது விசாரணையை நிறைவு செய்வதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஏற்கெனவே ஆஜரான அப்போலோ மருத்துவர்களிடம் சில விளக்கங்களை தெளிவுப்படுத்த வேண்டி இருப்பதால் வரும் 5, 6, 7 ஆகிய தேதிகளில் அப்போலோ மருத்துவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.