மனுத் தாக்கல் செய்த மறுகணமே சசிகலாவுக்கு முன்ஜாமீன்

ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் நீதிபதி உத்தரவு
மனுத் தாக்கல் செய்த மறுகணமே சசிகலாவுக்கு முன்ஜாமீன்

சொத்துக்குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது, சொகுசு வசதி பெற 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், சசிகலா, இளவரசி உள்பட 4 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை காலத்தை முழுமையாக அனுபவித்துவிட்டு இவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்தனர். இதற்கிடையே சசிகலா சிறையில் இருந்தபோது அவருக்கு சட்ட விதிமுறைகளை மீறி சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருந்ததாகவும், இதற்காக சசிகலா ரூ.2 கோடியை லஞ்சமாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு வழங்கி இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் அப்போது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ரூபா

இந்த புகார் குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவும் உறுதி செய்தது. இதையடுத்து கர்நாடக ஊழல் தடுப்பு படையினர் சசிகலா மீது கடந்த 2018-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர். இதில் கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஜனவரி 7ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு காவல்துறையினர், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் பரப்பன அக்ரஹாரா சிறை சூப்பிரண்டு சோமசேகர், டாக்டர் அனிதா, அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர், சசிகலா, இளவரசி ஆகிய சேர்க்கப்பட்டனர்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கை பிப்ரவரி 11ம் தேதி விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயண் பட், சசிகலா உள்பட 7 பேரும் மார்ச் 11ம் தேதி (இன்று) நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் ஆஜராவதற்காக சசிகலா, இளவரசி ஆகியோர் விமானம் மூலம் பெங்களூரு சென்றனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை உடனடியாக விசாரித்த நீதிமன்றம், சசிகலா, இளவரசி உள்பட 4 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, தன் மீது விசாரணை நடத்த கர்நாடக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் டாக்டர் அனிதா தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அனிதாவிடம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்திருந்தது நினைவில் கொள்ளத்தக்கது.

Related Stories

No stories found.