ஓபிஎஸ் மகனுக்கு ஆதரவு... ஈபிஎஸ்-க்கு எதிராக கொந்தளிப்பு: சசிகலா திடீர் பாய்ச்சலுக்கு என்ன காரணம்?

ஓபிஎஸ் மகனுக்கு ஆதரவு... ஈபிஎஸ்-க்கு எதிராக கொந்தளிப்பு: சசிகலா திடீர் பாய்ச்சலுக்கு என்ன காரணம்?

அதிமுக சார்பாக உள்ள ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான ரவீந்திரநாத்தை செயல்பட விடாமல் தடுப்பதாக எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாகத் தேனி நாடாளுமன்ற உறுப்பினராக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக சார்பாக மக்களவையில் இருக்கும் ஒரே எம்.பி ரவீந்திரநாத். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தலைதூக்கிய நிலையில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அதிமுகவில் சட்ட அதிகாரத்தைப் பெறுவதற்கு இருதரப்பிலும் கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரவீந்திரநாத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும், அவர் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இல்லையென்றும் எடப்பாடி பழனிசாமி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் சட்டமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் ரவீந்திரநாத் மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள சசிகலா, ஈபிஎஸ்சை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், `ஒரு சில சுயநலவாதிகள் மேற்கொண்ட தவறான முடிவுகளால் இன்றைக்கு அதிமுகவின் சிறப்பு குறைந்து தன் பெருமைகளை ஒவ்வொன்றாக இழந்து வருவதாக கழகத்தொண்டர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். கட்சியின் நலனைக் காற்றில் பறக்க விட்டு, எடுத்த தவறான முடிவுகளால் மாநிலங்களின் நமது உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்ததோடு கட்சியின் அங்கீகாரத்தையும் இழந்து நிற்கிறோம்.

ஒரேயொரு மக்களவை உறுப்பினரைக் கட்சியை விட்டே நீக்குவதும், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பெயரைச் சொல்வதற்கு யாருமே வேண்டாம் என்று கண்மூடித்தனமாக முடிவு எடுப்பதையும் அறிவார்ந்த செயலாக யாரும் பார்க்க மாட்டார்கள். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்பவர்களை கழகத் தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? நாடாளுமன்றத்தின் மக்களவையில் கட்சியின் அங்கீகாரத்தையே இழக்க நினைப்பதை, தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in