நான் மட்டுமே திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறேன்: ஈபிஎஸ்சை மறைமுகமாக தாக்கிய சசிகலா

நான் மட்டுமே திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறேன்: ஈபிஎஸ்சை மறைமுகமாக தாக்கிய சசிகலா

நான் ஒருவர் மட்டுமே திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறேன். நம்பிக்கையோடு இருங்கள் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

ஒற்றைத் தலைமை விவகாரத்திற்குப் பிறகு ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரண்டு அணிகளாக அதிமுக பிளவு பட்டு நிற்கிறது. ஏற்கெனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவும் தனி அணியாகப் பிரிந்து செயல்பட்டு வருகிறார்.

ஒற்றைத் தலைமை விவகாரத்திற்குப் பிறகு பிரிந்து சென்ற தொண்டர்களை, மீண்டும் கட்சியில் இணைத்து பலமான கட்சியாக அதிமுகவை மீண்டும் மாற்றுவேன் எனச் சொல்லி வருகிறார். இந்நிலையில் புரட்சிப் பயணம் எனத் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா, நேற்று இரவு சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தொண்டர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய சசிகலா, “உங்கள் ஊருக்கு வந்த என்னை அன்போடு வரவேற்றீர்கள். அதை என்னால் மறக்க முடியாது. எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு இக்கட்டான சூழலில் கட்சியை மீட்டெடுத்தோம். அதுபோல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஒரு இக்கட்டான சூழல் ஏற்பட்டது. ஆட்சியைத் தக்க வைக்க வேண்டிய நிலை வந்த போது, உங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கழக தொண்டரை முதலமைச்சராக அமர்த்தி விட்டு சென்றேன். ஆனால், இப்போது நடக்கும் நிகழ்வுகளையெல்லாம் நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். அதிமுகவை அழிக்க திமுக முயன்று வருகிறது. அவர்களுக்கு நாமே சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்து விடக்கூடாது. நான் ஒருவர் மட்டுமே திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறேன். நம்பிக்கையோடு இருங்கள் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் “ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in