`தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது'-ஓபிஎஸ்-க்கு ஆதரவாகக் களம் இறங்கும் சசிகலா!

`தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது'-ஓபிஎஸ்-க்கு ஆதரவாகக் களம் இறங்கும் சசிகலா!

“பொதுச் செயலாளராக இருந்த என்னை நீக்கியது செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. நானே பொதுச் செயலாளர் ஆனது கேள்விக்குறியாக இருக்கும் போது, ஓபிஎஸ்சை நீக்கியது எப்படிச் செல்லும்?” என ஓபிஎஸ்-க்கு ஆதரவாக சசிகலா கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சி விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாகத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதே வேளையில், “என்னை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கோ, கே.பி.முனுசாமிக்கோ இல்லை. எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி ஆகிய இருவரையும் கட்சியிலிருந்து நீக்குகிறேன்” என ஓபிஎஸ் தெரிவித்தார். இந்த நிலையில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக சசிகலா களத்தில் இறங்கியுள்ளார்.

இது தொடர்பாகப் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, "அதிமுகவின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது, தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. சுயநலவாதிகளைப் புறந்தள்ளும் நேரம் வந்துவிட்டது. தொண்டர்களின் எண்ணத்திற்கு மாறாகப் பணபலம், படைபலத்தைக் கொண்டு பதவியை அடித்துப் பிடிக்கலாம் என நினைத்தால் அந்தப் பதவி நிலைக்காது; சட்டப்படி அந்தப் பதவி செல்லாது. சட்டத்திற்குப் புறம்பான தலைமையைத் தொண்டர்கள் நிராகரிக்கும் காலம் வந்துவிட்டது. திமுகவில் ஒரு தவறான செயல் நடந்தது என்பதற்காகத்தான் எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பித்தார். தன்னை நீக்கியது போல தன்னுடைய கட்சியிலும் நடைபெறக் கூடாது என்பதை மனதில் வைத்துத்தான் பொதுச் செயலாளர் அடிமட்ட தொண்டனால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விதிகளை வகுத்தார். பொதுச் செயலாளராக இருந்த என்னை நீக்கியது செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. நானே பொதுச் செயலாளர் ஆனது கேள்விக்குறியாக இருக்கும் போது, ஓபிஎஸ்சை நீக்கியது எப்படிச் செல்லும்?” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in