சசிகலா இரண்டாவது இன்னிங்ஸ்!

சிக்சர் அடிப்பாரா... க்ளீன் போல்டு ஆவாரா?
சசிகலா
சசிகலா

அதிமுகவின் பவர்ஃபுல் ஒற்றைத் தலைமையாக அதிவேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறார் ஈபிஎஸ். கட்சிக்குள் ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதலே இன்னமும் ஒரு முடிவுக்கு வராத நிலையில், “அதிமுகவின் இரண்டு அணிகளையும் ஒருங்கிணைத்து அதற்கு நிச்சயம் தலைமை ஏற்பேன்” என சசிகலா அரசியலில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்று சொல்லி அரசியலுக்கு தற்காலிக ஓய்வுகொடுத்த சசிகலா, அதன் பிறகு ஆடியோ அரசியல், ஆறுதல் அரசியல், ஆன்மிக அரசியல், புரட்சிப்பயணம் என தமிழக அரசியலை பரபரப்பாக்கினார். ஆனால், அவர் நினைத்தபடி பெரிதாக ஏதும் நடக்கவில்லை. அதனால் மீண்டும் ஆஃப் லைன் மோடுக்குப் போனார்.

இப்போது, அதிமுக தலைமையைக் கைப்பற்ற ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் நீதிமன்ற படிகளில் ஏறி மோதிக்கொண்டிருக்கும் நிலையில், தானும் அதே ரூட்டில் நீதிமன்றக் கதவுகளைத் தட்டி இருக்கிறார் சசிகலா. ஆம், அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் முன்னமே தான் தொடுத்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என இப்போது சசிகலா மனு போட்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் சத்தம் காட்டாமல் ஒதுங்கி இருந்த சசிகலா மக்களவைத் தேர்தலில் தனது செல்வாக்கை காட்ட நினைக்கிறார். அதற்காகவே அவர் இந்த வழக்கை தூசுதட்டுகிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

அரசு முன்னாள் கொறடா நரசிம்மன்
அரசு முன்னாள் கொறடா நரசிம்மன்இரண்டாவது இன்னிங்ஸ் - யை தொடங்கும் சசிகலா..!

இதுகுறித்து நம்மிடம் பேசிய முன்னாள் அரசு கொறாடாவான நரசிம்மன், ‘’ சின்னம்மாவை பொறுத்தவரை ஈபிஎஸ், ஓபிஎஸ் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அதிமுக என்ற ஒரு குடையின் கீழ் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே. அப்படி இருந்தால் மட்டுமே தேர்தலில் திமுகவை வீழ்த்தி வெற்றிபெற முடியும்.

ஈபிஎஸ் தலைமையில் அதிமுக எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. அதற்குக் காரணம், முறையான வழிகாட்டுதல் இல்லாதது தான். ஈபிஎஸ் ஓபிஎஸ் உள்ளிட்ட தற்போது இருக்கும் முன்னாள் அமைச்சர்களை எல்லாம் உருவாக்கியவர் சின்னம்மா. நிச்சயம் அவர் ஒரு நல்ல முடிவை விரைவில் அறிவிப்பார்.

தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளோம். தேர்தலுக்கு முன்னதாகவே தொண்டர்களிடமும் மக்களிடமும் நீதி கேட்பார் சின்னம்மா. அதிமுகவில் சின்னம்மாவுக்கு ஆதரவு இல்லை என சிலர் கூறலாம். ஆனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு முன்னாள் அமைச்சர்கள் சிலர் சின்னம்மாவிடம் பேசி இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் சின்னம்மா பொறுமை காக்கச் சொல்லி இருக்கிறார். நீதிமன்றத்தையும் தாண்டி அரசியல் ரீதியாகவும் பல காய்களை சின்னம்மா நகர்த்தி வருகிறார். இப்போது அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அனைத்தும் ஜெயமாகும் போது சின்னம்மா தலைமையில் அதிமுக வலுவான இயக்கமாக மீண்டும் எழுந்து நிற்கும்’’ என்றார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

ஈபிஎஸ் முகாமில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர். அவரிடம் சசிகலாவின் அடுத்தகட்ட மூவ் குறித்துப் பேசினோம். ‘’எங்களைப் பொறுத்தவரை அண்ணன் எடப்பாடியார் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அதனால், இருந்தவர்கள், வந்தவர்கள், போனவர்களைப் பற்றி நாங்கள் யோசிக்கவில்லை. எங்களுடைய இலக்கு வரும் மக்களவைத் தேர்தல் தான். அதை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என்று மட்டும் சொன்னார் அவர்.

கு.ப கிருஷ்ணன்
கு.ப கிருஷ்ணன்

’’இரு அணிகளை ஒருங்கிணைத்து அதற்கு தலைமை ஏற்பேன் என்கிறார் சசிகலா. அவ்வாறு நடந்தால், அவரது தலைமையை நிச்சயம் ஏற்போம். அவரும் மக்களை சந்திக்கவுள்ளார். நாங்களும் மக்களை சந்திக்கவுள்ளோம். அவர் இசைவு தெரிவித்தால் நிச்சயம் அவருடன் இணைந்து மக்களை சந்திப்போம். எங்களுக்குத் தெரிந்து சசிகலா ஈபிஎஸ் அணியுடன் பேசி வருகிறார் என நினைக்கிறேன். அப்படி பேசி இணைந்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வோம். யார் முதலில் கை நீட்டுவது என்பதுதான் இங்கு பிரச்சினை’’ என்கிறார் ஓபிஎஸ் அணியின் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்.

முதல் இன்னிங்ஸில் ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்த்த சசிகலா, இரண்டாவது இன்னிங்ஸில் சிக்‌சர் அடிப்பாரா... அல்லது க்ளீன் போல்டு ஆவாரா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in