`தேனி அதிமுக தீர்மானம் பெரும்பான்மையினர் கருத்து அல்ல'

அருண்மொழித்தேவன் எம்எல்ஏ
`தேனி அதிமுக தீர்மானம் பெரும்பான்மையினர் கருத்து அல்ல'

``சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று தேனி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிற தீர்மானம் பெரும்பான்மையான தொண்டர்களின் கருத்து இல்லை'' என கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அருண்மொழித்தேவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுக தொடர் தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்றால், சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளர் செய்யது கான், முன்னாள் எம்பி பார்த்திபன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் சசிகலா, டி.டி.வி.தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்ற தேனி மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கையெழுத்திட்டு தீர்மானத்தையும் நிறைவேற்றினர்.

இது அதிமுகவில் திடீர் குழப்பத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினரும், கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அருண்மொழித்தேவன் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 21 ம் தேதியன்று அதிமுகவில் சசிகலாவை சேர்க்கக்கூடாது என மாவட்ட கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தார். அதை தேனி மாவட்ட தீர்மானத்துக்கு எதிராக இப்போது புதிதாக நிறைவேற்றியது போல சிலர் செய்திகளைப் பரப்பினார்கள்.

இன்று காலை இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "சசிகலாவை கட்சியில் சேர்க்க கூடாது என 90 சதவீத அமைப்பு ரீதியான மாவட்டங்களில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். நாங்களும் அப்படித்தான் அப்போது தீர்மானம் நிறைவேற்றினோம். அப்போது தீர்மானம் நிறைவேற்றாத ஒன்றிரண்டு மாவட்டங்களில் தேனி மாவட்டமும் ஒன்று. இந்த நிலையில் தேனி மாவட்டத்தினர் இப்போது தங்கள் கருத்தை தாமதமாக சொல்லியுள்ளனர். அது மிகப் பெரும்பான்மையான தொண்டர்களின் கருத்து அல்ல" என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in