நான் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் அபகரித்து விடவோ, அழித்துவிடவோ முடியாது: கொந்தளித்த சசிகலா!

தஞ்சையில் நடைபெற்ற இணைப்பு விழா
தஞ்சையில் நடைபெற்ற இணைப்பு விழா

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைப்பேன். அப்படி பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைப்பது என்பது நான் சிறுவயது முதலே கற்றுக் கொண்டதுதான் என்று சசிகலா பேசியுள்ளார். அவரது சகோதரர் திவாகரன் நடத்திவந்த அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலா அணியுடன் இணைக்கும் விழா இன்று தஞ்சையில் நடைபெற்றது.

சசிகலா சகோதரர் திவாகரன் நடத்திவந்த அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலா அணியுடன் இணைக்கும் விழா இன்று தஞ்சையில் நடைபெற்றது.அதில் கலந்து கொண்ட சசிகலா பேசுகையில், " புரட்சித்தலைவியின் மறைவுக்குப் பிறகு இக்கட்டான சூழ்நிலையும் குழப்பங்களும் ஏற்பட்டன. நானும் விதிவசத்தால் பெங்களூருவில் சிறைப்பட்டிருந்தேன். அதன்பிறகு எத்தகைய துரோகங்கள், சூழ்ச்சிகள் அரங்கேறியது என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இதன் காரணமாக கட்டுக்கோப்பாக இருந்த நம் இயக்கம் எதிரிகளின் ஆசைப்படி சிதறிப் போனது.

புரட்சித்தலைவர் ஆட்சியிலும் சரி, அம்மா ஆட்சியிலும் சரி, பிரிந்து போன எத்தனையோ பேரை திரும்பவும் ஒன்று சேர்த்திருக்கிறோம். புரட்சித் தலைவரின் மறைவுக்குப் பிறகு நம் கழகம் சந்திக்காத பிளவா? எத்தனையோ பேர் அதிமுகவின் கதை முடிந்து விட்டது என்று சொன்னார்கள். ஆனால் கருணாநிதியின் கனவை நாம் கலைத்தோம். ஒரு பிரிந்த கட்சியை எப்படி ஒன்று சேர்ப்பது என்று நான் கற்றுக் கொண்டேன். வாழ்க்கையில் சிறுவயதிலிருந்தே பிரிந்தவர்களை ஒருங்கிணைப்பது எப்படி என்பதை கற்றுக் கொண்டு விட்டேன். எனவே, அனைவரையும் ஒன்றுபடுத்தி இயக்கத்தை வலுப்படுத்தி அதனை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வதே எஞ்சியுள்ள என் வாழ்க்கையின் லட்சியம்.

நம்முடைய அரசியல் பயணம் எத்தகையது என்பது எல்லோருக்கும் தெரியும். நாமெல்லாம் நன்றிக்காகவும் , விசுவாசத்திற்காகவும் துணை நின்றவர்கள். துரோகங்களை வேர் அறுத்து தியாகங்களை மட்டுமே செய்து வந்துள்ளோம். புரட்சித்தலைவி அம்மாவை கண்ணிமை போல கடைசி வரை காத்து வந்தோம். எனவே, அதிமுகவைக் காப்பாற்றுவதிலும் நம் பங்கு அவசியம்.

நம் இயக்கத்தில் நடந்த நிகழ்வுகள் மனதுக்கு பெரும் வேதனையை அளிக்கிறது. நம் இருபெரும் தலைவர்களும் இதனையெல்லாம் பெரும் வேதனையோடு பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அப்பாவி தொண்டர்களை ஏமாற்றுவதா? ஒரு சில சுயநலவாதிகள் இருந்து கொண்டு, நாம் இருக்கும் இயக்கம் எப்பேர்பட்ட இயக்கம்? எப்பேர்பட்ட தலைவர்களைக் கொண்ட இயக்கம்? நம் தலைவர்கள் பட்ட கஷ்டங்கள் என்ன? அவர்கள் செய்த தியாகங்கள் என்னென்ன? எத்தனை கழகத் தொண்டர்கள் தங்கள் இன்னுயிரை இழந்து உள்ளார்கள் என்பதைப் பற்றி எல்லாம் சற்றும் சிந்திக்காமல் தங்களுக்குக் கிடைக்கின்ற ஆதாயத்தைப் பற்றி மட்டும் மனதில் கொண்டு, போட்டிபோட்டுக் கொண்டு செயல்படுவது எந்த விதத்தில் நியாயம்? இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி தொண்டர்கள தான் என்பதை நினைக்கும்போது என் மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.

நம் அம்மா(ஜெயலலிதா) மறைவுக்குப் பிறகு 2016 டிசம்பர் மாதம்வரை நடைபெற்ற பொதுக்குழுக்கள் தான் உண்மையான பொதுக்குழுக்கள். அந்த பொதுக்குழுக்கள்தான் கழக சட்ட விதிகளின்படி முறையாக அழைப்பு கொடுக்கப்பட்டு ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு சிறப்பாக நடைபெற்ற பொதுக்குழுக்கள் ஆகும். அதற்குப் பிறகு நடைபெற்ற பொதுக்குழுக்களை வெறும் நிர்வாகிகள் கூட்டமாகத்தான் தொண்டர்கள் பார்க்கிறார்கள்.

அதிமுக வரலாற்றிலேயே ஆண்டுக்கு ஒரு முறை கழக சட்ட விதிகளை யாருமே இப்படி மாற்றியதில்லை. இது மிகப்பெரிய கேலிக்கூத்தாக இருக்கிறது. இவர்கள் செய்கிற காரியங்கள் எதுவுமே சட்டப்படி செல்லாது. இதற்கெல்லாம் விரைவில் ஒரு நல்ல தீர்வு ஏற்படும். இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அப்படியே விட்டுவிட முடியாது. இதற்காகவா நாங்கள் இத்தனை ஆண்டு காலம் ஒவ்வொரு நொடியும் சிந்தித்து, திமுகவின் எதிர்ப்புகளை சமாளித்து, பொதுமக்களின் பேராதரவோடு இந்த இயக்கத்தை வளர்த்து, ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தோம்?

எத்தனையோ சூழ்ச்சிகளையும், துரோகங்களையும் வென்றெடுத்த இந்த இயக்கம், தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த சூழ்ச்சி வலையில் இருந்தும் கண்டிப்பாக விடுபடும். உண்மையான அதிமுக ரத்தத்தை உடம்பில் கொண்டுள்ள யாரும் இதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். அனைவரும் ஒன்றிணைவார்கள்.

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய நம் அம்மாவின் அன்பு தங்கையாக சொல்கிறேன். புரட்சித் தலைவரையும், புரட்சித் தலைவியையும் பார்த்து வளர்ந்த பெண்ணாக, அவர்களின் பாசறையில் பயின்ற வீர தமிழச்சியாக சொல்கிறேன். நான் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அபகரித்து விடவோ, அழித்துவிடவோ முடியாது. விரைவில் எல்லாவற்றையும் சரி செய்து அனைவரையும் ஒருங்கிணைத்து, எந்தவித ஜாதி ,மத பேதமும் இல்லாமல், வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் அதே மிடுக்கோடும் செருக்கோடும் புது பொலிவு பெறும்.

புரட்சித்தலைவரும், நம் அம்மாவும் நம்மை வழி நடத்தி செல்கிறார்கள். எனவே, திமுகவினர் எத்தனைக் கணக்குகள் போட்டாலும் அது நிறைவேறப் போவதில்லை. மாறாக திமுகவின் மக்கள் விரோத ஆட்சியால் அவர்களை தள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள். இரு பெரும் தலைவர்கள் நடத்திய மக்களாட்சி மீண்டும் வராதா என்று அவர்கள் ஏங்குகிறார்கள். எனவே, அடுத்து அமையப்போவது அதிமுக ஆட்சி தான். அது புரட்சித் தலைவரும், அம்மாவும் நடத்திய பொற்காலட்சியாக அது அமையும்" என்று சசிகலா பேசினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in