புரட்சிப் பயணத்தை தொடங்கினார் சசிகலா… தீவிரமாக கண்காணிக்கும் ஈபிஎஸ்!
தொண்டர்களைச் சந்திப்பதற்காக சசிகலா தனது அரசியல் சுற்றுப் பயணத்தை தி.நகர் இல்லத்திலிருந்து தொடங்கி இருக்கிறார். சசிகலாவின் அசைவுகளை ஈபிஎஸ் தரப்பினர் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய நிலையில் சசிகலா திடீரென தனது அரசியல் சுற்றுப் பயணத்தை அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி இன்று மதியம் தி.நகரில் உள்ள தனது இல்லத்திலிருந்து சசிகலா தனது பயணத்தைத் தொடங்கினர். அப்போது அங்குக் கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், சசிகலாவிற்கு ஆதரவாகக் கோஷமிட்டும் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள். அவர் கோயம்பேடு, பூந்தமல்லி, திருத்தணி, குண்டலூர், கோரமங்கலம், கே.ஜி. கண்டிகை, எஸ்விஜி புரம், கிருஷ்ணாகுப்பம், ஆர்கே பேட்டை, அம்மையார் குப்பம் ஆகிய இடங்களில் தொண்டர்களைச் சந்திக்கிறார்.
தொண்டர்களைச் சந்திக்கும் இந்த பயணத்தின்போது, சசிகலாவை அதிமுகவிற்குத் தலைமை ஏற்க வற்புறுத்தும் நிகழ்வுகளும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஒற்றை தலைமை குறித்து சசிகலா எந்த கருத்தைத் தெரிவித்தாலும், அது அதிமுகவிற்குள் பெரிய சலசலப்பை ஏற்படுத்தும். அதிமுக நிர்வாகிகள் யாராவது சசிகலாவைச் சந்திக்கிறார்களா என்பதையும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.