‘நான் இருக்கும்வரை அதிமுகவை யாரும் எதுவும் செய்ய முடியாது’ - சசிகலா சூளுரை!

சசிகலா
சசிகலா

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் சசிகலா. திருமணத்தை நடத்திவைத்து உரையாற்றிய அவர், “நான் இருக்கும்வரை அதிமுகவை யாரும் எதுவும் செய்ய முடியாது. இயக்கம் உன்னத நிலையை அடைய நானே காரணமாக இருப்பேன். அதுவரை ஓயமாட்டேன்!” எனச் சூளுரைத்தார்.

தனது உரையின்போது, ”அதிமுக உண்மையான தொண்டர்களின் தியாகத்தால் உருவானது. கழகம் ஒன்றுபட வேண்டும். வென்றுகாட்ட வேண்டும். எதிர்க்கட்சிகள் எத்தனை கணக்குப் போட்டாலும் நான் இருக்கும்வரை இந்த இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது. எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஏற்பட்ட அதே சோதனைக் காலம்தான், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னும் இப்போதும் ஏற்பட்டுள்ளது. இந்த இயக்கம் பல சோதனையான காலங்களைத் தாண்டி வந்துள்ளது. அப்போதெல்லாம் மீண்டு வந்ததைப் போல இப்போதும் மீண்டு உன்னத நிலையை அடையும்” என்றார் சசிகலா.

மேலும், “கடைக்கோடித் தொண்டர்கள் நிமிர்ந்தால்தான் கழகம் நிமிரும் என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள். அந்த உன்னத நிலையை அடைய நானே காரணமாக இருப்பேன். கட்சியை மீட்கும்வரை நான் ஓயமாட்டேன் என்பதை உறுதியோடு கூறுகிறேன். நான் சுற்றுப்பயணம் செல்லும் சாலையில் எல்லாம் மக்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி எப்போதுவரும் என கேட்க நினைக்கிறார்கள். அதை விரைவில் நிறைவேற்றிக்காட்டுவோம் என அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து தொண்டர்களையும் ஒரு குடையின் கீழ் இணைத்து பேரியக்கமாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கழகத்தை மீண்டும் வலிமையான இயக்கமாக மாற்றிட நேரம் வந்துவிட்டது” என்று சசிகலா கூறினார்.

சசிகலா அதிமுக விவகாரத்தை மிகவும் மெதுவாகக் கையாள்வதாகவே பரவலாகச் சொல்லப்பட்டுவரும் நிலையில், குரங்கு கதை ஒன்றையும் விழா மேடையில் சொல்லி, பொறுமையின் அவசியத்தை அவர் விளக்கினார். திருமண மேடையில் சசிகலாவின் பரபரப்பான அரசியல் பேச்சு, அவரது ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in