சசிகலாவின் ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களா முடக்கம்

இதுவரை ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது வருமானவரித் துறை
சசிகலாவின் ரூ.100 கோடி மதிப்புள்ள  பையனூர் பங்களா முடக்கம்

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவை வருமானவரித் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பல கோடி மதிப்பிலான சொத்துகளை சசிகலா பினாமி பெயரில் வாங்கிக் குவித்தது தெரியவந்தது.

இதையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 187 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பல கோடி ரூபாயை முறைகேடாக மாற்றி, பினாமி பெயரில் ரூ.1,600 கோடி வரை சொத்துகள் வாங்கி குவித்ததும், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததும் தெரியவந்தது. சென்னையில் உள்ள ஜாஸ் சினிமாஸ்,
ஸ்பெக்ட்ரம் மால், கங்கா சினிமாஸ் உட்பட 10 நிறுவனங்கள் பினாமி பெயரில் வாங்கப்பட்டதை அடுத்து, சுமார் ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமானவரித் துறையினர் முடக்கினர்.

மேலும் 2003, 2005-ம் ஆண்டுகளில் 65 நிறுவனங்கள் முறைகேடாக வாங்கியது அம்பலமானது. அதனடிப்படையில், பினாமி பெயரில் வாங்கப்பட்ட ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ ஹரிசந்தனா எஸ்டேட்ஸ், சென்னை போயஸ் கார்டனில் உள்ள 10 கிரவுண்ட் நிலம் என மொத்தம் ரூ.300 கோடி சொத்துகளை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டு, பினாமி தடுப்பு சட்டத்தின்கீழ் வருமானவரித் துறையினர் முடக்கினர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் பகுதியில் 49 ஏக்கரில் அமைந்துள்ள ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களாவை வருமானவரித் துறையினர் முடக்கி உள்ளனர். பங்களாவில் முடக்கப்பட்டதற்கான 10 பக்கங்கள் கொண்ட நோட்டீஸை வருமானவரித் துறையினர் ஒட்டிச் சென்றனர். இதுவரை சசிகலாவுக்குச் சொந்தமான ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளதாக வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது முடக்கப்பட்டுள்ள பையனூர் நிலம், தன்னிடம் இருந்து மிரட்டி வாங்கப்பட்டதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in