களமிறங்கும் சசிகலாவால் கதிகலங்கும் எடப்பாடி பழனிசாமி: சூடுபிடிக்கும் ஒற்றைத் தலைமை விவகாரம்!


களமிறங்கும் சசிகலாவால் கதிகலங்கும் எடப்பாடி பழனிசாமி: சூடுபிடிக்கும் ஒற்றைத் தலைமை விவகாரம்!

சசிகலாவோடு இணைந்து பணியாற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விரும்புவதாக சசிகலா ஆதரவாளர் ஆவின் வைத்தியநாதன் கூறியிருப்பது, அதிமுக வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை சசிகலா முடுக்கி விட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இதனால் எளிதில் கட்சியைக் கைப்பற்றிவிடலாம் எனக் கணக்குப் போட்ட எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தது அதிமுக. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்சுக்கு இடையே உள்ள அதிகாரப் போட்டியின் காரணமாக வேட்பாளர்களைத் தேர்வு செய்வது, கட்சி நிர்வாகிகளைச் சேர்ப்பது, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது என அனைத்து கட்சிப் பணிகளிலும் இருதரப்பிலும் கருத்து வேறுபாடு தொடர்ந்தது. கட்சிக்குள் எந்த முடிவை எடுத்தாலும் மற்றொருவரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், இருதரப்பிலும் முட்டல், மோதல்கள் தொடர்ந்தன.

இந்த நிலையில் ஒற்றைத் தலைமை கோஷத்தை எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளரான ஜெயக்குமார் மூலம் முதலில் பொதுவெளியில் பகிங்கரமாக வெளிப்படுத்தினார். அத்தோடு நிறுத்திவிடாமல், கட்சியைக் கைப்பற்றும் முயற்சியிலும் ஈபிஎஸ் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். அவரின் இந்த அதிரடி நகர்வுகள் ஓபிஎஸை திணறச் செய்தது. இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். ஒற்றைத் தலைமை பிரச்சினை வலுக்கத் தொடங்கியதும் இருதரப்பிலும் தங்களது ஆதரவாளர்களை அணிதிரட்ட ஆரம்பித்தனர்.

கட்சிப் பதவியைப் பொருத்தவரை ஓபிஎஸ் பலமாக இருந்தாலும், கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் ஈபிஎஸ்ஸின் கையே ஓங்கியிருந்தது. கிட்டத்தட்டக் கட்சியை ஈபிஎஸ் கைப்பற்றிவிட்டதாகவே நினைக்கும் நேரத்தில், ஓபிஎஸ் தனது கடைசி ஆயுதமான சசிகலா அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளார்.

சசிகலா சிறையிலிருந்து வெளிவந்த பிறகு சசிகலாவைப் பற்றி பேச்சு எழுந்த போதெல்லாம் மென்மையாகவே பதில் அளித்து வந்தார் ஓபிஎஸ். ஆனால் சசிகலாவைக் கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை என அதிரடியாகச் சொல்லிவந்தார் ஈபிஎஸ். இதனால் அமைதி காத்து வந்தார் சசிகலா. ஓபிஎஸ்ஸுக்கு ஏற்பட்ட நெருக்கடி, சசிகலாவிற்கு சாதகமான சூழலை அமைத்துக் கொடுத்துள்ளது. தனக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக சசிகலாவிற்கு தூது அனுப்பி இருக்கிறார் ஓபிஎஸ். ஏற்கெனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் தீவிர ஆதரவாளர்களான பெங்களூரு புகழேந்தி மற்றும் அவரது ஆவின் வைத்தியநாதன் இருவரும் ஓபிஎஸ்ஸை சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். இந்த விவகாரம் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சசிகலா தரப்பில் தொடர்ந்து ஓபிஎஸ்ஸிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் மீண்டும் சந்தித்துப் பேசி இருக்கிறார் ஆவின் வைத்தியநாதன். இந்த நிலையில் ஓபிஎஸ்ஸும் சசிகலாவைக் கட்சியில் இணைத்துக் கொள்ளும் முடிவை எடுத்திருப்பதாகவும், இதனால் சசிகலா தரப்பு உற்சாகமாகக் களம் இறங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமியால் ஓரங்கட்டப்பட்டவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சசிகலா இறங்கியுள்ளார். 23-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடிக்கும் போது, அதை தடுக்கும் முயற்சியில் சசிகலா ஆதரவாளர்கள் தீவிரமாக 'செயல்படுவார்கள்' எனத் தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in