`கோடநாடுக்கு செல்ல தடையில்லை; நியாயம் கிடைக்கணும்னு சசிகலா கூறியிருக்கிறார்'

வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டி தகவல்
`கோடநாடுக்கு செல்ல தடையில்லை; நியாயம் கிடைக்கணும்னு சசிகலா கூறியிருக்கிறார்'

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை காவல் துறையினர் சசிகலாவிடம் நடத்திய விசாரணை நிறைவுள்ளதாகவும், இனி கோடநாடு செல்ல சசிகலாவுக்கு தடையில்லை என்றும் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டி கூறினார்.

கடந்த 2017-ம் ஆண்டு கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கை மேற்கு மண்டல ஐஜி சுதாகரன் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைதொடர்ந்து கோடநாடு சொத்தின் உரிமையாளர் என்ற அடிப்படையில் சசிகலாவிடம் நேற்று ஐஜி தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அதனை தொடரந்து இன்று இரண்டாவது நாளாக சசிகலாவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிவுற்றதை அடுத்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2017-ம் ஆண்டு கோட நாட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பான விசாரணை சசிகலாவிடம் நடைபெற்றது. ஐஜி சுதாகர் தலைமையிலான காவல் துறையினர் சசிகலாவிடம் இரண்டு நாட்களாக விசாரணை நடத்தி முடித்தனர். நீதிமன்ற உத்தரவுபடி கோடநாடு வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சசிகலாவிடம் விசாரணை நடைபெற்றது. அனைத்து கேள்விகளுக்கும் சசிகலா பதிலளித்து இருக்கிறார். விசாரணை திருப்திகரமாக நடந்தது.

கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவிற்கு நன்கு தெரிந்த காவலாளி கொலை செய்யபட்டார். காவலாளி கொலைக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என போலீஸாரிடம் சசிகலா வலியுறுத்தி உள்ளார். வேறு எதேனும் கேள்வி உள்ளதா என சசிகலா காவல் துறையினர் கேள்வி கேட்கும் அளவிற்கு போலீஸார் திருப்தி அடைந்து சென்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் யார் மீதாவது சந்தேகம் உள்ளதா என காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சட்டத்திற்குட்பட்டு காவல்துறை நேரில் வந்து சசிகலாவிடம் விசாரணை நடத்தினர். அந்த வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்கு நகரும்.

கடந்த 5 ஆண்டுகளாக சசிகலா சுயகட்டுப்பாட்டுடன் கோடநாடு எஸ்டேட்டிற்கு செல்லாமல் இருந்ததால்தான், எந்தவித தடயங்களும் அழியாமல் போலீஸாரின் அடுத்த கட்ட விசாரணைக்கு உதவி இருக்கிறார். இனிமேல் கோடநாடு எஸ்டேட்டிற்கு செல்ல சசிகலாவுக்கு எந்த தடையும் இல்லை. உடைந்த கதவை புதுப்பிக்கவும், செல்லவும் எந்த தடையுமில்லை. நல்ல முறையில் விசாரணை சென்று கொண்டிருக்கிறது. விசாரணைக்கு சசிகலா முழு ஒத்துழைப்பு அளித்திருக்கிறார்" என்று கூறினார்.

Related Stories

No stories found.