மோடியின் ஆசியோடு வலம் வருகிறாரா சசிகலா?

செங்கோட்டையனின் திராவிட ஆட்சி பிரகடனத்தின் பின்னணி என்ன?
மோடியின் ஆசியோடு வலம் வருகிறாரா சசிகலா?

எடப்பாடி பழனிசாமியை அடக்குவதற்காக பாஜக, சசிகலாவுடன் பேச்சு நடத்திக்கொண்டிருக்கிறது என்று பரவிய தகவல் சரிதான் என்பதை தனது சொல்லாலும், செயலாலும் உறுதிப்படுத்தியிருக்கிறார் சசிகலா. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தரிசனத்தை முடித்துவிட்டு, அவர் சொன்ன ஓர் கருத்து அவரது மனநிலையே அதிமுகவும் இல்லாமல், பாஜகவும் இல்லாமல் ஒரு அர்த்தநாரீஸ்வர நிலையில் இருப்பதைக் காட்டியது.

அதிமுக இடத்தைப் பிடிக்க பாஜக முயற்சிக்கிறதா என்கிற கேள்விக்கு, பழைய சசிகலாவாக இருந்தால், “ஆமாம், அதை மீட்டெடுக்கத்தான் நாங்கள் இருக்கிறோம்” என்று சொல்லியிருப்பார். இப்போது அடிபட்டு, வதைபட்டு, ரொம்பவே பக்குவப்பட்டதாலோ என்னவோ, “பாஜக தமிழ்நாட்டில் வளர நினைப்பதில் தவறில்லை. அதற்கு நாம் எதுவும் சொல்ல முடியாது. கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலேயே செயல்பட முடியும்” என்றார் சசிகலா.

அன்று வந்ததும் அதே நிலா...

ஜெயலலிதா மறைந்ததும் சசிகலாவை அவர் இடத்துக்கு நகர்த்தும் முயற்சியை ரசிக்காத பாஜக வேகமாக காய் நகர்த்தி சசிகலாவை சிறைக்குள் தள்ளியது. அத்துடன் அவரது விசுவாசி பழனிசாமி பாஜக விசுவாசியாக மாற்றப்பட்டதும் நடந்தேறியது. சசிகலாவுக்கு எதிராக ஆடிட்டர் குருமூர்த்தியால் கொம்பு சீவிவிடப்பட்ட தர்மயுத்த நாயகனும், பழனிசாமியுடன் கை கோத்தார். 4 ஆண்டுகள் இந்த இருவரையும் வைத்து ஆட்சியிலும், கட்சியிலும் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து முடித்தது பாஜக.

ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் வந்ததும் கள நிலவரத்தை ஆராய்ந்த அதே பாஜக, சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் சேர்த்துக்கொண்டால் திமுகவின் வெற்றியை நிச்சயமாகத் தவிர்க்க முடியும் என்று யோசனை சொன்னது. ஆனால், அதை விடாப்பிடியாக மறுத்தார் பழனிசாமி. “பற்றியெரியும் தீயை அணைக்க சாக்கடை ஜலத்தைப் பயன்படுத்தினாலும் தப்பில்லை” என்று குருமூர்த்தியும் சொன்னார். “ சசிகலா வந்தால் நல்லதுதான்” என்று எச்.ராஜாவும் சொன்னார். சசிகலா கட்சிக்குள் வந்தால், தனது இருப்பு கேள்விக்குள்ளாகும் என்பதால், அந்தச் பேச்சை முளையிலேயே கிள்ளியெறிந்தார் பழனிசாமி.

அதேநேரத்தில் பாஜகவுடனான உறவு தேர்தலில் தனது வெற்றிக்குப் பாதகமாக முடியும் என்று, சட்டப்பேரவைத் தேர்தலிலேயே அதற்கு வெறும் 20 தொகுதிகளை மட்டுமே கொடுத்தார் பழனிசாமி. உள்ளாட்சித் தேர்தலில் இன்னும் குறைவான சீட்களைச் சொல்லி, அவர்களே கூட்டணியைவிட்டு வெளியேறவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தினார். இதெல்லாம் பழனிசாமி மீது பாஜகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் கிடைத்த மோசமான தோல்வி இவ்விரு கட்சிகள் இடையேயான உறவை மேலும் பதம் பார்த்தது. இதையடுத்து, பாஜகவுடனான உறவை முற்றாக முறித்துக்கொள்ள முயலும் பழனிசாமிக்கு செக் வைக்க நினைத்தது டெல்லி. அதன் விளைவே பிள்ளைப்பூச்சியான பன்னீர்செல்வத்துக்கு கொடுக்கு முளைக்கவும், சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை தேனி மாவட்டத்தில் எழவும் காரணம் என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள்.

ஆக, பழனிசாமியை அடக்குவதற்கான ஆயுதமாக சசிகலா, டி.டி.வி.தினகரனைப் பயன்படுத்த விரும்புகிறது பாஜக. அன்று வந்ததும் அதே நிலா... இன்று வந்ததும் அதே நிலா... ஆனால், இன்று மட்டும் சசிகலாவை பாஜக விரும்புவதற்கு ஒரே காரணம் பழனிசாமியை பதம் பார்க்கும் திட்டம்தான் என்கிறார்கள்.

தினகரன்
தினகரன்

நழுவிய டி.டி.வி.தினகரன்

இன்னொரு பக்கம் டிடிவி.தினகரனையும் வளைக்க முயல்கிறது பாஜக. தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கை, 5 ஆண்டுகளுக்குப் பிறகு தூசு தட்டி எடுத்த மத்திய அரசு, விசாரணை என்ற பெயரில் டி.டி.வி.தினகரனை கடந்த 12-ம் தேதி டெல்லிக்கு வரவைத்தது. அப்போது டி.டி.வி.தினகரனிடம் பாஜகவின் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

விசாரணை முடிந்தவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தினகரனிடம், "இந்த விசாரணையின் பின்னணியில் அரசியல் இருக்கிறதா?" என்று கேட்டபோது அதை மறுத்தார். "தமிழ்நாட்டில் அரசியல் சூழ்நிலை மாறுகிறபோதெல்லாம் இந்த வழக்குத் திரும்ப நோண்டப்படுகிறதே?" என்ற கேள்விக்கு, "இல்லை. சுகேஷ் சந்திரசேகரிடம் 10 நாளாக விசாரித்திருக்கிறார்கள். அவர் கொடுத்த ஸ்டேட்மென்ட் அடிப்படையில் என்னிடம் விசாரித்தார்கள் அவ்வளவுதான்" என்றார். பாஜக குறித்து சசிகலா தெரிவித்த கருத்து குறித்து கேட்டபோது, "அதிகாலையிலேயே வந்து, இப்போதுதான் விசாரணை முடிந்திருக்கிறது. ரொம்ப சோர்வாக இருக்கிறது. அரசியல் கேள்விகள் வேண்டாமே" என்றார் தினகரன்.

பொதுவாக, எந்தக் கேள்வியையும் துணிவாக எதிர்கொள்வதுடன், பொறுமையாக விளக்கமாகப் பதிலளிப்பதுதான் தினகரனின் இயல்பு. ஆனால், அன்றைய தினம் பாஜக குறித்த கேள்விக்கு எதிராகவோ, ஆதரவாகவோ பதில் சொல்வதைத் தவிர்த்தார் அவர். திரைமறைவில் நடக்கிற பேச்சுவார்த்தைக்கு தனது பேட்டியால் எந்தப் பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர் அப்படி நடந்துகொண்டதாகச் சொல்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

சீண்டிய செங்கோட்டையன்

இப்படியான நகர்வுகளை பழனிசாமி தரப்பும் கூர்ந்து கவனித்து வருகிறது. அதன் விளைவாகவே சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, "தமிழகத்தை திராவிட இயக்கங்கள்தான் ஆளும். வேறு எவராலும் தமிழகத்தை ஆள முடியாது" என்று செங்கோட்டையன் பேசியது என்கிறார்கள் அதிமுகவினர். செங்கோட்டையனின் இந்தப் பேச்சும், அதற்கு திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்ததும் பழனிசாமி எதிர்பார்த்தது போலவே பாஜகவை உலுக்கியிருக்கிறது.

அதுவும், "தமிழகத்தை ஒருபோதும் பாஜகவால் ஆளவே முடியாது" என்று மக்களவையில் ராகுல் காந்தி பேசிய அதே வார்த்தையை செங்கோட்டையன் வேறு மொழியில் சொன்னது, பாஜகவை கூடுதலாகக் காயப்படுத்தியிருக்கிறது. அதன் விளைவுகள் விரைவில் தெரியவரும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஓபிஎஸ் - ஈபிஎஸ்

தலைமைப் பொறுப்பில் சசிகலா?

"இந்த அரசியல் விளையாட்டின் விளைவாக அதிமுக சசிகலாவின் கட்டுப்பாட்டிற்குள் போய்விடுமா, அதற்கு பாஜக துணை நிற்குமா?" என்ற கேட்டால் சிரிக்கிறார்கள் பாஜகவினர். சசிகலா குறித்த அவர்களது மதிப்பீடுதான் அதற்குக் காரணம்.

"சசிகலா மட்டும் வெளியேவந்தால்... என்ற பில்டப்புகள் எல்லாம் புஷ்வாணமாகிவிட்டது. குழாயடிச் சண்டை போடக்கூட, தெம்பில்லாதவர் சசிகலா என்பது ஊர்ஜிதமாகிவிட்டது. அவரது மூளையான நடராஜனும் மறைந்துவிட்டார். திவாகரன், தினகரன் உள்ளிட்ட குடும்பத்தினர் எல்லாம் சசிகலாவுடன் முரண்பட்டு நிற்கிறார்கள். என்னவோ நாளைக்கே ஆட்சி அதிகாரம் இவர்கள் கைக்கு வரப்போவதைத் போல, முதல்வர் நாற்காலி யாருக்கு என்ன கனவிலேயே பாதிச் சண்டை நடக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, கடல் போல் செல்வம் இருந்தும் அள்ளிக்குடிக்க வழியில்லாத வகையில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை எல்லாம் கண்கொத்திப் பாம்பாக சசிகலா தரப்பைக் கவனிக்கின்றன. சட்டப்பேரவைத் தேர்தலில் தினகரன், சசிகலா பெயரைச் சொல்லி களம்கண்டவர்கள் எல்லாம் தங்கள் கைக்காசை செலவளித்தார்களே ஒழிய, பத்துப் பைசா கூட சசிகலா குடும்பத்திடம் இருந்துவரவில்லை.

முன்பு, பழனிசாமி பின்னால் கொங்கு வேளாளர்களும், சசிகலாவின் பின்னால் முக்குலத்தோரும் இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், சசிகலாவுக்குப் பின்னால் அவரது சமூகத்தைச் சேர்ந்த கட்சியினர்கூட இல்லை என்பது இப்போது ஊர்ஜிதமாகிவிட்டது. எனவே, சசிகலாவை முக்குலத்தோரின் முகமாக நாங்கள் பார்க்கவில்லை. பாஜகவின் வளர்ச்சிக்கு தோதான களத்தை உருவாக்கும் கருவியாகத்தான் சசிகலாவை பார்க்கிறோமே தவிர, அவரைக்கொண்டுபோய் அதிமுக தலைமை பீடத்திலோ, முதல்வர் நாற்காலியிலோ உட்கார வைப்பது எங்கள் வேலையல்ல" என்கிறார்கள் பாஜகவினர்.

'வின்னர்' படத்தில் வடிவேலு சொல்வாரே, "தம்பி... அந்தப் பொண்ண நீங்க காதலிச்சா என்ன, நான் காதலிச்சா என்ன? மொத்தத்துல அந்தக் குடும்பம் நாசமாகப் போகணும் அவ்வளவுதான்..." என்று. அதைப்போல, "அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கு ஓபிஎஸ் வந்தால் என்ன, சசிகலா வந்தால் என்ன? மொத்தத்தில் அந்தக் கட்சி அட்ரஸ் இல்லாமப் போகணும். அந்த இடத்துக்கு பாஜக வரணும்..." என்பதுதான் டெல்லியின் கனவு. இதை பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா, தினகரன் அணியினர் எல்லாம் புரிந்துகொண்டு செயல்படப் போகிறார்களா அல்லது சுய லாபத்துக்காக ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து கட்சியோடு சேர்ந்து தங்களையும் அழித்துக்கொள்ளப் போகிறார்களா என்பது காலத்தின் கையில்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in