‘அதிமுக அணிகளை ஒருங்கிணைக்கும் வேலை எப்போதோ தொடங்கியாயிற்று..’

எம்ஜிஆர் நினைவிடத்தில் சசிகலா சூசகம்
‘அதிமுக அணிகளை ஒருங்கிணைக்கும் வேலை எப்போதோ தொடங்கியாயிற்று..’

இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என ஈபிஎஸ் தரப்பில் உறுதியாக சொல்லிவிட்ட நிலையில், ’அதிமுக அணிகளை ஒருங்கிணைக்கும் வேலை எப்போதோ தொடங்கியாயிற்று..’ என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். 

எம் ஜி ஆரின் நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் சென்று, மலர் தூவி, மரியாதை செலுத்தி, உறுதிமொழி ஏற்றார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கூறியதாவது:

"அதிமுகவுக்கும் சசிகலாவுக்கு தொடர்பில்லை என ஜெயக்குமார் கூறியிருக்கிறார். எங்கள் தொண்டர்களிடம் கேட்டால் அது குறித்து சரியாக பதில்  சொல்வார்கள். அதிமுக தங்களுக்குத்தான் சொந்தம் என கம்பெனி போல் தனிப்பட்ட ஒருவர் சொல்ல முடியாது. தொண்டர்களின் முடிவுதான் இறுதி.

பொதுச் செயலாளர் விவகாரத்தில் தொண்டர்கள் எண்ணம் எதுவோ அதுதான் வெற்றி பெறும். எம்ஜிஆரின் உழைப்பை திமுக பயன்படுத்திக் கொண்டு அவரையே தூக்கி எறிந்ததில், தொண்டர்கள் ஆதரவோடு அதிமுக தொடங்கப்பட்டது. அதன் பிறகு திமுகவைவிட அதிக ஆண்டுகள் அதிமுக ஆட்சி செய்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களை வழங்கியது.

பெரியார் வலியுறுத்திய ’சமூகத்தில் சமநிலை, பெண்களுக்கும் சம உரிமை’ உள்ளிட்ட கொள்கைகளை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா செய்துள்ளனர். அதிமுக ஆட்சிக்கு வந்தால்தான் ஏழை எளிய மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.  எனவே திமுகவுக்கு எந்த விதத்திலும் இடம் கொடுத்து விடக்கூடாது.  அதனால்தான் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இந்த ஒரே பார்வையில்தான் என் பயணம் உள்ளது. அதில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். அதிமுக அணிகளை ஒருங்கிணைக்கும் பேச்சுவார்த்தை எப்போதோ தொடங்கி விட்டது" என்று சசிகலா கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in