திரும்பி வந்த திவாகரன்... திரிசங்கில் தினகரன்!

மீண்டும் சோபிக்குமா சுந்தரக்கோட்டை அரசியல்?
சசிகலாவுடன் திவாகரன்
சசிகலாவுடன் திவாகரன்

அக்மார்க் அதிமுகவுக்குள் ஏகப்பட்ட அடிதடிகள் நடந்து கொண்டிருக்க, அக்காவுடன் இனி ஒட்டுமில்லை உறவுமில்லை என்று சொல்லி அண்ணா திராவிடர் கழகத்தை ஆரம்பித்த திவாகரன், அந்த இயக்கத்தை அக்கா சசிகலாவிடம் அடைக்கலப்படுத்தி அவரோடு ஐக்கியமாகி இருப்பதும் அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்படுகிறது.

கடந்த 12-ம் தேதி தஞ்சையில் நடைபெற்ற அந்த (இணைப்பு!) விழா மேடையில் அக்காவின் தியாகத்தைப் பற்றிச் சொல்லும் போது திவாகரன் நா தழுதழுக்க... அதைப் பார்த்து சசிகலா கண்கலங்க... இருவரும் அப்படியொரு பாசமழையைப் பொழிந்தார்கள். உண்மையிலேயே சசிகலாவும் திவாகரனும் எப்போதும் மிகவும் அத்தனை பாசமாகத்தான் இருந்தார்கள். அந்தப் பாசத்தை பகையாக்கிவிட்டுத்தான் சித்தி சசிகலாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு போனார் தினகரன். தற்போது மீண்டும் அவரை தனது பாசவலைக்குள் கொண்டு வந்திருக்கிறார் திவாகரன்.

திவாகரனுக்கு ஏதாவது ஒன்றென்றால் சசிகலா துடித்துப்போய் விடுவார். அதேபோல், அக்காவுக்கு என்ன தேவையோ அதையெல்லாம் தானே முன்னின்று பார்த்துப் பார்த்துச் செய்பவர் திவாகரன். ஜெயலலிதா இருக்கும் காலத்திலேயே திவாகரன் சொல்வதைத் தான் சசிகலா கேட்பார். அதனாலேயே மன்னார்குடியும் அதிமுகவின் இன்னொரு அதிகார மையமாக மாறியது. திவாகரனின் கடைக்கண் பார்வைக்காக சுந்தரக் கோட்டையில் உள்ள அவரது வீட்டு காம்பவுண்ட் கேட்டருகே மணிக்கணக்கில் காத்துக்கிடந்தார்கள் இன்றைய முன்னாள் அமைச்சர்களும், எம்எல்ஏ-க்களும். கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் கிடைக்க வேண்டியது கிடைத்தது என்பதால் மன்னார்குடிக்கு வழி தேடியது தமிழக அதிமுக.

ஆனால், இதெல்லாமே அதிமுகவுக்கு சசிகலா பொதுச்செயலாளர் ஆகும்வரை தான். அதன் பிறகு சித்தியின் செல்லப்பிள்ளையாக டிடிவி தினகரன் அவரோடு வந்து ஒட்டிக்கொண்டதால் தம்பியை தள்ளிவைத்துவிட்டு அக்காள் மகன் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தார் சசிகலா. தினகரனின் அவசர புத்தியால் தான் அதிமுகவுக்குள் முதல் கலகம் வெடித்தது. ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார். பாஜகவின் கோபத்துக்கு ஆளாகி சசிகலா சிறைசெல்லவும் நேர்ந்தது. அதைத் தொடர்ந்து அதிமுகவும் அவர் கைவிட்டுப் போனது.

சிறையில் இருந்த நாட்களில் சசிகலாவை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார் தினகரன். யாராக இருந்தாலும் நேரடியாக மனுப் போட்டு அவரைப் பார்க்க முடியாது. வழக்கறிஞர் மூலமாகவே பார்க்கமுடியும் என்ற நிலையை உருவாக்கி திவாகரன் உள்ளிட்டவர்கள் சசிகலாவைப் பார்க்கமுடியாத நிலையை உருவாக்கினார். அதிமுகவை கைப்பற்ற முயற்சித்து தோற்றுப் போனதால் சசிகலாவின் கட்டளையையும் மீறி அமமுக என்ற கட்சியை உருவாக்கினார்.

இத்தகைய புறக்கணிப்புகளால் தான் 2018-ல் ‘அண்ணா திராவிடர் கழக’த்தை உருவாக்கினார் திவாகரன். அப்போதும் அவர் சசிகலாவின் பெயரையோ, படத்தையோ பயன்படுத்தக் கூடாது என அவருக்கு வழக்கறிஞர் மூலமாக முட்டுக்கட்டை போடவைத்தார் தினகரன். இதனால் ஆத்திரப்பட்ட திவாகரன், “சசிகலா எனது முன்னாள் சகோதரி” என்று வெறுப்பைக் கொட்டினார்.

இப்படி அவ்வாறு இவ்வாறாகக் கிடந்த சசிகலாவும் திவாகரனும் இனியும் இப்படி பிரிந்து கிடந்தால் தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்தே மீண்டும் கைகோத்திருக்கிறார்கள் என்றாலும், இருவருக்கும் இடையிலான அன்பும் பாசமும்தான் அவர்களை மீண்டும் இணைய வைக்க முக்கிய காரணம் என்கிறார்கள்.

சசிகலா விடுதலையான நேரத்தில் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. பதறிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய திவாகரன், சசிகலாவுக்கு எதிராக சதி நடப்பதாக அலப்பறை செய்து அவருக்கு தரமான சிகிச்சை கிடைக்கச் செய்தார். அதேபோல் திவாகரனுக்கு கரோனா என்றபோது சசிகலாவும் பதறினார். அப்போது நேரில் போய்ப் பார்க்கவில்லை என்றாலும் அவரது உடல் நலன் குறித்து விசாரித்தபடி இருந்தார் சசிகலா. இந்த நிலையில், கடந்த முறை தஞ்சாவூருக்கு வந்திருந்த சசிகலா, தம்பியின் சுந்தரக்கோட்டையில் தான் ஐந்து நாட்கள் தங்கினார். அப்போது அக்காவும் தம்பியும் பழைய நினைவுகளை அசைபோட்டு நடந்தவற்றையெல்லாம் பேசினார்கள்.

தண்டனைக் காலத்துக்கு முன்னதாகவே சசிகலாவை வெளியில் எடுக்க டெல்லியில் தனக்கு தெரிந்த வழக்கறிஞர்களை, தான் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளுக்கு தினகரன் எப்படி எல்லாம் குறுக்கே நின்றார் என்பது குறித்து அப்போது சசிகலாவிடம் விவரமாக எடுத்துச் சொன்னாராம் திவாகரன். சசிகலாவை நேரில் சந்திக்கவே முடியாத நடந்த சதிகளையும் பட்டியல் போட்டிருக்கிறார்.

ஆரம்ப காலத்திலிருந்து அக்காவின் அரசியல் வளர்ச்சிக்குத் தேவையான விஷயங்களை தான் செய்ததையெல்லாம் பட்டியலிட்டுக்காட்டி அப்போதெல்லாம் ஏதாவது சிக்கல் இருந்திருக்கிறதா என்று நேருக்கு நேர் கேட்டாராம் தம்பி. தனக்கும் ஜெயலலிதாவுக்கும் திவாகரன் முன்னின்று செய்து கொடுத்த காரியங்களையெல்லாம் நினைவுகூர்ந்த சசிகலா, அதன் பிறகே மனம் மாறியதாகச் சொல்கிறார்கள்.

இப்போதைக்கு யாருடைய ஆதரவும் இல்லாமல் தனியாளாக நிற்பதைச் சுட்டிக்காட்டிய சசிகலாவிடம், “இனி வாழ்நாள் முழுக்க உனக்கு ஆதரவாக நான் நிற்பேன்” என்று உறுதி அளித்தாராம் திவாகரன் - ”இனிமேல் என் பேச்சை மட்டுமே நீ கேட்க வேண்டும்” என்ற நிபந்தனையோடு!

சசிகலா இன்றைக்கு இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதற்குக் காரணமே தினகரன்தான். எனவே, இனிமேல் தினகரனை ஏற்கக்கூடாது என்பதுதான் சசிகலாவுக்கு திவாகரன் வைத்திருக்கும் முக்கியமான நிபந்தனை என்கிறார்கள். இதற்கு சசிகலா தனது மௌனத்தையே சம்மதமாகத் தந்ததால் தான் தனது கட்சியைக் கலைத்திருக்கிறார் திவாகரன்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரிடமும் நினைத்த மாத்திரத்தில் பேசும் அளவுக்கு நட்பில் இருக்கிறார் திவாகரன். டெல்லியிலும் தனக்கென தனி லாபி வைத்திருக்கிறார். இதையெல்லாம் உள்வாங்கி இருக்கும் சசிகலா, திவாகரன் தன்கூட இருப்பது தனக்கு பெரும் பலம் என்று நம்புகிறார். தம்பி மூலமாக ஈபிஎஸ்சுக்கு சமரச தூது அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் அதும் கைகூடும் என்பது சசிகலாவின் கணிப்பு.

அக்கா - தம்பி பாசம் இப்படி ஓடிக்கொண்டிருக்க... தினகரனோ தனது அமமுகவை தொடர்ந்து நடத்தும் முடிவில் இருக்கிறார். சசிகலா எப்போது வந்தாலும் கட்சியின் பொதுச்செயலாளராக அவரை ஏற்றுக்கொள்ளத் தயார் என்ற நிலைப்பாட்டில் இன்னமும் உறுதியாக இருக்கிறார். ஆனால், சசிகலா அதற்குத் தயாராக இல்லை. அவரது இலக்கு அதிமுகவை நோக்கியே இருக்கிறது.

ஆக, இதுவரை முக்கோணமாக இருந்த மன்னார்குடி குடும்ப அரசியல் இப்போது இருமுனை அரசியலாக மாறி இருக்கிறது. அக்காவும் தம்பியும் சேர்ந்துவிட்டாலும் எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் திரிசங்கில் நிற்கிறார் தினகரன். அடுத்து என்ன நடக்கிறதென்று அமைதியாக இருந்து பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in