சசிகலா, தினகரனை அதிமுகவில் இணைக்க ஓபிஎஸ் பச்சைக்கொடி!

சசிகலா, தினகரனை அதிமுகவில் இணைக்க ஓபிஎஸ் பச்சைக்கொடி!
கோப்புப் படம்

அதிமுகவை சரிவில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றால், சசிகலாவையும், தினகரனையும் மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை, பெரியகுளம் லட்சுமிபுரத்தில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ‘நாளை மறுதினம் நடைபெறும் நகராட்சித் தலைவர் மற்றும் பேரூராட்சித் தலைவர் தேர்தலில் திமுகவினரிடம் விலை போய்விடக் கூடாது’, ‘நமக்கு வாய்ப்புள்ள இடங்களைத் தவிர மற்ற இடங்களில் தேர்தலில் இருந்தே விலகியிருப்பதுதான் நமக்கு நல்லது’ என்பது போன்ற ஆலோசனைகளை கட்சியினருக்கு வழங்கினார் பன்னீர்செல்வம்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் தோல்வி குறித்து சில நிர்வாகிகள் பேச ஆரம்பித்து, அது விவாதமாக உருவெடுத்தது. அப்போது அதிமுக தொடர் தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்றால், சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் சிலர் பேசினர். அந்தக் கருத்தையே மாவட்ட செயலாளர் செய்யது கான், முன்னாள் எம்பி பார்த்திபன் போன்றோரும் எதிரொலித்தனர்.

“இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரான நீங்கள்தான் நல்ல முடிவெடுக்க வேண்டும்” என்று நிர்வாகிகள் பந்தை ஓபிஎஸ் பக்கம் திருப்பிவிட்டனர். அதற்கு அவர், “நான் மட்டும் கட்சியில்லை. தலைமைக் கழகத்தில் நிறைய நிர்வாகிகள் இருக்கிறார்கள். அவர்களும் இதற்குச் சம்மதிக்க வேண்டுமே?” என்றார். அதற்கு நிர்வாகிகள், “நாங்கள் தீர்மானம் போட்டுத்தந்தால் நீங்கள் கட்சியிடம் பேசுவீர்களா?” என்று கேள்வி எழுப்ப, சரி என்று பச்சைக்கொடி காட்டினார் ஓபிஎஸ். இதைத் தொடர்ந்து சசிகலா, டி.டி.வி.தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்ற தேனி மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கையெழுத்திட்டு தீர்மானத்தை நிறைவேற்றினர்.

சசிகலா வருகை

இந்தப் பரபரப்புக்கு இடையே, சசிகலாவின் தென்மாவட்டச் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி வருகிற 4-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆன்மிகச் சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து நெல்லை மாவட்டம் விஜயாபதி ஸ்ரீவிஸ்வாமித்திரர் கோயிலுக்கும், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கும் செல்லும் சசிகலா மறுநாள் திருச்செந்தூல் இருந்து புறப்பட்டு இலஞ்சி குமரன் கோயிலுக்குச் செல்கிறார். இந்த 2 நாட்களும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பல இடங்களில் தொண்டர்களைச் சந்திக்க உள்ளார். இரண்டு அறிவிப்புகளும் ஒரே நாளில் வெளியாகியிருப்பதால், ஓபிஎஸ் திட்டமிட்டே இப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கக் கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Related Stories

No stories found.