தீர்ப்புக்கு முன் உத்தமர்கோயிலில் வழிபட்ட சசிகலா!

உத்தமர் கோயில் சசிகலா
உத்தமர் கோயில் சசிகலா

அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்ற சென்னை உரிமையியல் நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு சற்று முன்பாக திருச்சி அருகேயுள்ள உத்தமர் கோயிலில் வழிபட்டுச் சென்றார் சசிகலா. இங்கு வழிபட்டும்கூட அவரது வேண்டுதல் நிறைவேறவில்லை.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் எனவும் தீரப்பு வழங்கப்பட்டு, சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் வி.கே.சசிகலா தமது ஆதரவாளர்களை சந்திக்க செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் சசிகலாவை வரவேற்பதற்காக அமமுக தொண்டர்கள் மற்றும் சசிகலாவின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் அதிமுக கொடியுடன் கூடியிருந்தனர்.

அமமுக அமைப்புச்செயலாளரும், முன்னாள் மேயருமான சாருபாலா தொண்டைமான் பூங்கொத்து கொடுத்து சசிகலாவை வரவேற்றார்.

விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அவர் சேலம் நோக்கி செல்கிறார். சேலம் செல்லும் வழியில் திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள மும்மூர்த்திகள் குடிகொண்டிருக்கும் உத்தமர்கோயிலில் சிறப்பு ஆரத்தியுடன் தரிசனம் செய்தார். இக்கோயிலில் சிவன், பிரம்ம, விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் வீற்றிருப்பதால் இத்தலத்தில் வேண்டும் யாவும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் தினமும் இக்கோயிலில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு செய்வர்.

அந்தவகையில் இன்று உத்தமர்கோயிலுக்கு வந்த சசிகலா, பெருமாள், சிவன், தாயார், சரஸ்வதி சன்னதிகளில் வழிபாடு நடத்தினார். அதேபோல் திருவாசி அருகே உள்ள மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலிலும் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் செய்துவிட்டு சேலம் நோக்கி அவர் சென்று கொண்டிருந்தபோது சென்னை உரிமையியல் நீதிமன்றத்தின் தீர்ப்பு அவருக்கு பாதகமாக வந்திருக்கிறது. இதனால் உத்தமர் கோயிலில் வழிபட்டும்கூட ஒன்றும் நடக்கவில்லையே என்று சசிகலாவின் ஆதரவாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in