தலைவர் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக் கூடாது: ஓபிஎஸ், ஈபிஎஸ்சுக்கு சசிகலா திடீர் அட்வைஸ்!

லட்சுமியைப் பாராட்டும் சசிகலா
லட்சுமியைப் பாராட்டும் சசிகலா

அதிமுகவினர் முதலில் ஒழுங்காக இருக்க வேண்டும், நான்தான் தலைவர் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக் கூடாது என்று ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு மறைமுகமாக சசிகலா அறிவுரை வழங்கி இருக்கிறார்.

காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் சசிகலா
காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் சசிகலா

மயிலாடுதுறையில் உள்ள அன்பகம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் வளரும் இரண்டு கைகளும் இல்லாத மாணவி லட்சுமி என்பவர் தன்னம்பிக்கையுடன் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, அதில் நல்ல மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வி.கே சசிகலாவும் தொலைபேசியில் லட்சுமியைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். அத்துடன் நேரில் வந்து சந்திப்பதாகவும் கூறியிருந்தார். தற்போது தஞ்சாவூரில் தங்கியிருக்கும் அவர் லட்சுமியிடம் தெரிவித்தவாறு அவரை சந்திக்க இன்று மயிலாடுதுறை அன்பகம் காப்பகத்திற்கு வந்தார்.

குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கும் சசிகலா
குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கும் சசிகலா

அங்கு மாணவி லட்சுமியைச் சந்தித்து பாராட்டினார். சசிகலா வருகையை வரவேற்கும் விதமாக காப்பக மாணவிகள் வரவேற்பு பாடல் பாடினர். அதைத்தொடர்ந்து மாணவி லட்சுமிக்கு ரூபாய் ஐந்தாயிரமும், காப்பகத்திற்கு ரூபாய் ஒரு லட்சமும் தனது அன்பளிப்பாக சசிகலா வழங்கினார். அதன்பிறகு காப்பகத்தில் உள்ள சிறுவர், சிறுமிகள் உள்ளிட்ட அனைத்து குழந்தைகளையும் சந்தித்து இனிப்புகள் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," நான் ஏற்கனவே பொதுச்செயலாளர்தான். அவர்கள்தான் தற்போது சண்டை போடுகிறார்கள். அதிமுக பொன்விழா ஆண்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. திமுக அரசு தேர்தலில் அளித்த பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எதிர்க்கட்சி என்று சொல்பவர்கள் தற்போது உட்கட்சிக்குள்ளே சண்டை போடுவதால் வருகின்ற தேர்தலில் பொதுமக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள்? அதிமுகவினர் முதலில் ஒழுங்காக இருக்க வேண்டும் . தலைவர் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக் கூடாது. கழகத் தொண்டர்களும், பொதுமக்களும்தான் அதனைச் சொல்ல வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in