முதல்வர் பதவியை குறிவைக்கிறாரா சசி தரூர்?

கேட் போடும் கேரள காங்கிரஸ் தலைவர்கள்!
முதல்வர் பதவியை குறிவைக்கிறாரா சசி தரூர்?

காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற சசி தரூர், கேரளத்தில் செல்வாக்குமிக்க தலைவராகத் தன்னை முன்னெடுக்க வியூகம் வகுத்து வருகிறார். இதற்காக அவர் ‘மலபார் யாத்திரை’ என்னும் பெயரில் நடைபயணம் ஒன்றையும் நடத்தி முடித்துள்ளார்.

ஆனால், சோனியா காந்தி குடும்பத்தின் ஆசிபெற்ற மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எதிராகப் போட்டியிட்டவர் என்பதாலும், மாநில அரசியலின் மையப்புள்ளிக்கு வந்துவிடுவாரோ என்ற அச்சத்தினாலும் கேரள மாநில காங்கிரஸார் சசி தரூருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துகின்றனர். இந்த அதிருப்திகளுக்கு மத்தியில் சசிதரூரின் வியூகம் சக்சஸ் ஆகுமா என்பதுதான் கேரள காங்கிரஸின் இப்போதைய பேசுபொருள்.

மலபார் யாத்திரையில்...
மலபார் யாத்திரையில்...

ஐ.நா சபையின் துணைப் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர் சசிதரூர். தனது ஆழ்ந்த அறிவால் உலகம் முழுவதும் பயணித்து கருத்தரங்குகள், மாணவர்கள் மத்தியில் உரைவீச்சு என எப்போதும் பிசியாகவே இருப்பவர். அதனாலேயே ‘உலக மனிதன்’ என்று அவரைக் கேரளவாசிகள் அன்போடு அழைக்கின்றனர். 2009-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியை தன்வசமாக்கி வைத்திருப்பவர் சசி தரூர். அந்தளவுக்கு அறிவுஜீவியாக அவர் மீது கேரள மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் இருக்கிறது. ஆனால், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அவருக்கு அவ்வளவாய் நெருக்கம் இல்லை. டெல்லி அரசியல்வாதி என்பதே சசிதரூர் குறித்த கேரள காங்கிரஸாரின் பார்வை. அதனால்தான் காங்கிரஸ் தலைவர் தேர்தலிலும் சொந்த மாநிலமான கேரளத்தில்கூட அவரால் அதிக வாக்குகளைக் கவரமுடியவில்லை.

இந்த நிலையில், தலைவர் தேர்தலுக்குப் பிறகு தன்னை ரொம்பவே மாற்றிக்கொண்டு வருகிறார் சசிதரூர். அறிவுஜீவி இமேஜ் இருப்பதால் தலைவர் தேர்தலில் சோனியாவும் ராகுலும் தன்னை ஆதரிப்பார்கள் என எதிர்பார்த்தார் சசிதரூர். ஆனால், காங்கிரஸில் உருவான ஜி23 அதிருப்திக் குழுவில் சசிதரூரும் இருந்ததால் காந்தி குடும்பம் சசி தரூரை கண்டுகொள்ளவில்லை. போதாக்குறைக்கு, பாஜகவின் ஸ்லீப்பர் செல் என்ற முத்திரையையும் தரூர் மீது சிலர் தந்திரமாகக் குத்தி அவரை போட்டியிலிருந்தே ஓரங்கட்டினார்கள்.

இத்தகைய காரணங்களால் கார்கேவுக்கு கடும் போட்டியை உருவாக்க முடியாமல் போன சசி தரூர், இப்போது மாநில அரசியலில் தனக்கான இடத்தை தக்கவைப்பது என்ற நிலைக்கு வந்திருக்கிறார். அதற்காகவே அவர் ராகுல் காந்தி பாணியில் மலபார் யாத்திரையைச் தேர்வு செய்திருக்கிறார். அதன்படி, முதல்கட்டமாக நான்கு வடமாவட்டங்களை ஒன்றிணைத்து, ‘மலபார் யாத்திரை’ யை நடத்தி முடித்துள்ளார். இந்தப் பயணத்திலும் சசி தரூர் சந்தித்த சிக்கல்கள் ஏராளம்.

மலபார் யாத்திரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளை சந்தித்த சசி தரூர்...
மலபார் யாத்திரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளை சந்தித்த சசி தரூர்...

சசி தரூரின் ’மலபார் யாத்திரை’ யின் போது கோழிக்கோடு மாவட்ட இளைஞர் குழு சார்பில் ’மதச்சார்பின்மைக்கான சவால்களும் சங்பரிவார் அமைப்புகளும்’ என்னும் பெயரில் விவாத நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் இந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் அழுத்தமே காரணம் என்கிறார்கள். இதேபோல், கண்ணூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியும் சசி தரூரை வைத்து ஏற்பாடு செய்த 'மதச்சார்பின்மையும் நேருவும்' என்ற கருத்தரங்கையும் ரத்து செய்தது. இவை அனைத்தும் கேரள காங்கிரஸைவிட்டு சசி தரூரை ஒதுக்குவதற்கான ஒத்திகை தான் என்கிறார்கள்.

கேரள காங்கிரஸில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் தனித் தனி அணிகளாக வலுவான நிலையில் உள்ளனர். இதில்லாமல் மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரனும் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசனும் தனி ஆவர்த்தனம் செய்கிறார்கள். இதில் எந்த அணியிலும் இல்லாதவர் என்பதே சசி தரூருக்கு ப்ளஸ்ஸும் மைனஸும் என்கிறார்கள். தனக்கென தனி அணி ஏதும் வைத்துக்கொள்ளாதவர் என்பதால் சசி தரூரை மற்ற கோஷ்டிகள் யாரும் அவ்வளவாய் அங்கீகரிப்பதில்லை.

மலபார் யாத்திரையில் கிறிஸ்தவ மத போதகர்களை சந்தித்த சசி தரூர்...
மலபார் யாத்திரையில் கிறிஸ்தவ மத போதகர்களை சந்தித்த சசி தரூர்...

இதுகுறித்து சசிதரூருக்கு நெருக்கமான கேரள காங்கிரஸார் சிலரிடம் பேசினோம். “சசிதரூர் இப்போது முதல்வர் பதவியைக் குறிவைத்து காய்நகர்த்துகிறார் என்றெல்லாம் மலையாள ஊடகங்களில் எழுதுகிறார்கள். ஆனால், அவருக்கு அப்படி எந்த நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை. ‘காங்கிரஸில் இருப்பதே பெருமை; காங்கிரஸை வளர்ப்பதே கடமை’ என இயங்கி வருகிறார். கேரள காங்கிரஸார் மத்தியில் அவருக்கு செல்வாக்கு இல்லை என்பதும் அத்தனை உண்மை இல்லை. ஆதரவு இல்லாமலா மூன்று முறை எம்பி-யாகி இருக்கிறார்? இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் சபரிநாதன், மூன்று முறை எம்பி-யாக இருந்த எம்.கே.ராகவன் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெளிப்படையாகவே சசி தரூரை ஆதரித்தார்கள். எம்.கே.ராகவன் தான் இந்த மலபார் சுற்றுப் பயணத்தையே ஒருங்கிணைத்தார்” என்கிறார்கள் அவர்கள்.

சசி தரூரின் மலபார் யாத்திரையின் போது இளைஞர் காங்கிரஸ் முன்னெடுத்த உரை அரங்குகளை அகில இந்திய தலைமையே தலையிட்டு ரத்துசெய்யச் சொன்னதாகத் தெரிகிறதே என அவர்களைக் கேட்டால், மெளனப் புன்னகையையே பதிலாக வருகிறது.

தனது மலபார் யாத்திரையின் போது இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் என மும்மத தலைவர்களின் இல்லங்களுக்கும் சென்றார்; உணவு அருந்தினார் சசி தரூர். இதுவும் கேரள காங்கிரஸ் தலைவர்களை பதற்றமடைய வைத்துள்ளது.

கேரளத்தில் இதற்கு முன்பும் இதேபோல் மாநிலத்தின் ஒருமுனையில் இருந்து, மறுமுனைக்கு பல யாத்திரைகள் நடந்துள்ளன. ரமேஷ் சென்னிதலா, முல்லப்பள்ளி ராமச்சந்திரன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் ‘ஐஸ்வர்ய கேரளம்’ என்னும் பெயரில் யாத்திரை சென்றுள்ளனர். ஆனால் அவையெல்லாம், அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் ஒப்புதல் பெறப்பட்டு, அவர்களின் வழிகாட்டலோடு மேற்கொள்ளப்பட்ட பயணங்கள். சசி தரூரின் மலபார் யாத்திரை அப்படியானது அல்ல. அதிலும் சசி தரூர், மக்களைக் குறிவைத்து பேரணி செல்லாமல், கேரள காங்கிரஸ் கட்சியினருடன் தன்னை நெருக்கமாக்கிக் கொள்ளும் விதத்தில் யாத்திரையைத் திட்டமிட்டார். இதை உணர்ந்ததாலேயே அகில இந்தியத் தலைமை அவருக்கு செக் வைத்ததாகச் சொல்கிறார்கள். தலைமையின் குறிப்பறிந்து கொண்டதால் கேரள காங்கிரஸாரும் இப்போது சசி தரூரைக் கண்டால் காததூரம் ஓடி ஒளிகிறார்கள்.

இதுபோதாதென்று, முதல்வர் கனவில் மிதக்கும் மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரனும், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசனும் சசி தரூரை பொது எதிரியாகவே பார்க்கிறார்கள். தரூரின் நடவடிக்கைகளும் கேரள காங்கிரஸார் மத்தியில் அவர் தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள எடுக்கும் முயற்சிகளும் முதல்வர் நாற்காலியைக் குறிவைத்துத்தான் என இவர்களால் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதே இந்த காழ்ப்புக்குக் காரணம் என்கிறார்கள்.

சுதாகரன்
சுதாகரன்

இந்த விவகாரங்கள் குறித்து கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரனிடம் பேசினோம். நாம் சொன்ன அனைத்தையும் பொறுமையாகக் கேட்டவர், “கேரள காங்கிரஸின் மரியாதைக்குரிய முகமாக சசி தரூர் இருக்கிறார். மக்களுக்கு அவரது அறிவாற்றலின் மீது கொள்ளைப் பிரியம் இருக்கிறது. கேரளத்தில் அவரை ஒதுக்கிவைக்க வேண்டிய அவசியம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. ஊடகங்கள் யாருடைய லாபத்திற்காகவோ அப்படி போலியான பிம்பத்தை கட்டமைக்கின்றன” என்று திகைப்பூட்டினார்.

சசி தரூரின் எதிர்கால திட்டம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும், “ஒட்டுமொத்த கேரள காங்கிரஸ் தலைவர்களும் ஒரே முகமாகச் சொன்னாலும்கூட அவரை கேரளத்தின் முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் தலைமை அங்கீகரிக்காது. காங்கிரஸ் அரசியலைப் பொறுத்தவரை சசி தரூருக்கு இனி இறங்குமுகமாகத்தான் இருக்கும். மக்களவைத் தேர்தலில் அவருக்கு பழையபடி திருவனந்தபுரம் தொகுதி கிடைக்குமா என்பதே சந்தேகம் தான் என்கிறார்கள் டெல்லி அக்பர் சாலையின் அண்மை அசைவுகளை அறிந்தவர்கள்.

கேரள அரசியலில் என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in