தலைவர் பதவிக்கு போட்டியிட்டதால் காங்கிரஸில் ஓரம் கட்டப்படும் சசி தரூர் எம்.பி

சசி தரூர்
சசி தரூர்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு திருவனந்தபுரம் எம்.பி சசிதரூர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சோனியா காந்தியின் ஆசியுடன் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி வாகை சூடினார். வெளிப்படையாகத் தேர்தல் அறிவித்தாலும், கார்கேவுக்குத்தான் தலைமையின் ஆதரவு இருந்ததால் எளிதில் வென்றதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தலைமையின் விருப்பத்திற்கு மாறாக தேர்தலில் போட்டியிட்டதால் சசிதரூர் மீது கட்சி கோபத்தில் இருப்பதாகவும், அவர் தொடங்கிய யாத்திரையை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் அதனால் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

சசிதரூர் எம்.பி, ’மலபார் யாத்திரை’ என்னும் பெயரில் கேரளத்தின் வட மாவட்டங்களை உள்ளடக்கிய யாத்திரை ஒன்றைத் தொடங்கியுள்ளார். முன்னதாக இதை முன்னிட்டு நேற்று, கோழிக்கோடு மாவட்ட இளைஞர் குழு சார்பில் ’மதச்சார்பின்மைக்கான சவால்களும்-சங்பரிவார் அமைப்புகளும்” என்னும் பெயரில் விவாத நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விவாத நிகழ்வு கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் அழுத்தமே காரணம் எனக் கூறப்படுகிறது.

ஆனால், இதை கேரள காங்கிரஸ் கட்சி தலைவர் சுதாகரனும், எதிர்கட்சித் தலைவர் வி.டி.சுதீசனும் மறுத்துள்ளனர். அவர்கள், “சசிதரூர் கேரளத்தில் காங்கிரஸ் உயர்ந்த முகம். மாநிலத்தில் எங்கும் அரசியல் நிகழ்ச்சியில் அவர் முன்னிலையில் இருக்கலாம். அதற்கு கேரள காங்கிரஸ் கமிட்டியின் பரிபூரண ஆதரவு உண்டு. சசிதரூரை ஒதுக்கிவைக்கும் முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை ”என்றனர். இவர்கள் இப்படிச் சொன்னாலும், இதேபோல் கண்ணூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியும் சசிதரூரை வைத்து நடத்த இருந்த 'மதச்சார்பின்மையும், நேருவும்' என்னும் கருத்தரங்கை ரத்து செய்துள்ளது. இதனால் கேரளத்தில் சசிதரூரை காங்கிரஸில் இருந்து ஓரம்கட்டும் முயற்சிகள் கனஜோராக நடப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in